விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி கட்சியானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி தனித்து இயங்கப் போவதாக அறிவித்துள்ளது.
ஜே.வி.பி.யில் இருந்து விலகி வந்து விமல் வீரவங்ச ஆரம்பித்த தேசிய சுதந்திர முன்னணி கட்சியானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்டது.
அதன் மூலம் கடந்த 2010ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரை விமல் வீரவங்ச வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக அதிகார பலம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது கூட்டு எதிர்க்கட்சியுடன் சேர்ந்து இயங்கும் விமல் தரப்பினர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி தனித்து இயங்கப் போவதாக இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற தமதுகட்சி உறுப்பினர்கள் அனைவரும் இன்று முதல் தனித்து இயங்கப் போவதாகவும், தம்மை ஒரு தனிக்குழுவாக அங்கீகரிக்குமாறும் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது விமல் வீரவங்ச கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து பொருத்தமான பதில் ஒன்றை அளிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பதிலளித்துள்ளார்.