உச்ச நீதிமன்றத்தால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர், புகைப்படங்களை, அரசு திட்டங்களில் இருந்து நீக்கவும், அரசு அலுவலகங்களில் பயன்படுத்தவும் தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனு, நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின், 2016 டிச., 5ல் மறைந்தார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பிப்., 14ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜெயலலிதா இறந்து விட்டதால், மற்ற மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, 10 கோடி ரூபாய் அபராதத்தை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில், சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவையின் தலைவர், கே.பாலு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
முதல்வராக இடைப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு, ‘அம்மா இரு சக்கர வாகன திட்டம்’ என்ற திட்டத்தை, பிப்., 20ல் அறிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஜெயலலிதா குற்றம் புரிந்துள்ளார் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த தீர்ப்புக்கு பின்னும், ஜெயலலிதாவின் புகைப்படங்களை, அரசு அலுவலகங்களில் வைத்திருப்பது, நேர்மையாக பணியாற்றுபவர்களின் மனதை திசை திருப்புவது போலாகி விடும்.
குற்றவாளியின் பெயரில் திட்டம் அறிவிப்பது, அரசியலமைப்பு சட்டத்தின்படி எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது.
ஜெயலலிதாபெயரில் பல திட்டங்களை, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த திட்டங் களில் எல்லாம், ஜெயலலிதாவின் புகைப் படங்களும் இடம்பெற்றுள்ளன. அவரது பெயரையும், புகைப்படங்களையும் அகற்ற வேண்டும்.
அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா பார்மசி, அம்மா உப்பு, அம்மா சிமென்ட் என, அறிவிக்கப்பட்ட பல திட்டங்களில் உள்ள ஜெயலலிதாவின் பெயரையும், அவரது புகைப் படத்தையும் நீக்கும்படி, அரசுக்கு மனு அனுப்பினேன்.
பள்ளி மாணவர்களுக்கான பை, சைக்கிள், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, இரு சக்கர வாகனங்களில் இடம்பெற்றுள்ள, ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும்.
தமிழக அரசின் நிதியில், ஜெயலலிதாவின் மரண நிகழ்வு, சினிமா தியேட்டர்களில் ஒளிபரப்பப்படுகிறது. இதற்கும், தடை விதிக்க வேண்டும்.
அரசுக்கு அனுப்பிய மனு, நிலுவையில் உள்ள போது, அரசு நிதியில், பிரம்மாண்டமான நினைவிடம் கட்ட, அரசு திட்டமிட்டுள்ளது.
ஜெயலலிதா இறந்து விட்டதால், அவருக்கு எதிரான மேல்முறையீடு விலக்கப்பட்டிருந்தாலும், அவர் ஒரு அப்பாவி என கருதக்கூடாது.
அரசு திட்டங்களில், அவரது புகைப்படங்களை பயன்படுத்துவது என்பது, அரசியலமைப்பு சட்டத்தையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் மீறுவது போலாகும்.
மக்களுக்கான நலத் திட்டங்களுக்கு, ஜெயலலிதாவின் சொந்த பணத்தை பயன்படுத்தவில்லை, அரசின் வருவாயில் இருந்து, நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
ஊழல் வழக்கில் குற்றவாளியாக உள்ள ஒருவருக்கு, அரசு திட்டங்களில் விளம்பரம் செய்யப்படுகிறது.
ஜெயலலிதா மீது விசுவாசம் உள்ளவர்கள், அவரது புகைப்படத்தை, அவரவர்களின் வீடுகளில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அரசு நிகழ்ச்சிகள், அலுவலகங்களில், அவரது புகைப்படத்தை வைப்பது, அதிகார துஷ்பிரயோகம் செய்வது போலாகும்.
எனவே, அரசு செலவிலோ, கட்சி செலவிலோ, பொது இடத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு, தடை விதிக்க வேண்டும்.
ஜெயலலிதா பெயரையும், அவரது புகைப்படத்தையும், அரசு திட்டங்களில் இருந்து அகற்றி விட்டு, புதிய பெயரை வைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுஉள்ளது. இம் மனு, நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் படத்தை அகற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ‘ஜெயலலிதாவுக்கு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், பார்லிமென்ட் மைய மண்டபத்தில், சிலை அமைக்க வேண்டும்’ என, அ.தி.மு.க., சார்பில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்கட்சியின் மகளிர் அணி, வழக்கறிஞர் அணி கூட்டங்களில், இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.