ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை உண்மையாக நிறைவேற்றுவதில், அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில், நேற்று இலங்கையின் அனைத்துலக கடப்பாடுகள் என்ற தொனிப்பொருளில், சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டு வந்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுமார் ஒன்றரை மணிநேரம் இரா.சம்பந்தன் உணர்வுபூர்வமாக இந்த உரையை நிகழ்த்தியிருந்தார்.
தமிழ் மக்கள் பொறுமையை இழந்து விட்டனர். முன்னைய அரசாங்கங்கள் தம்மை நடத்தியது போலவே, இந்த அரசாங்கமும் நடத்துகிறது என்று அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தேசியப் பிரச்சினைக்கு இன்னும் நீண்டகாலம் தீர்வு காண முடியாமல் இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.
காணாமற்போனவர்கள் பிரச்சினை, காணி, அரசியல் கைதிகள், உண்மை நல்லிணக்க ஆணைக்குழு, இழப்பீடு, காணாமற்போனோர் பணியகம், அடிப்படை விவகாரங்களில் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல், போன்ற விடயங்களுக்கு அவசரமாக தீர்வு காணப்பட வேண்டும்.
ஒன்றுபட்ட நாட்டுக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.
எல்லா மக்களுக்கும் நீதி மற்றும் சமத்துவம் அளிக்கும் நிலையான அமைதியை உறுதிப்படுத்துவதற்கு, உண்மையான அடிப்படையில் எடுக்கப்படும், அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளுக்கு, அதிகபட்ச ஒத்துழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளிக்கும்.
அதேவேளை படையினரை அனைவரையும் நாம் போர்க்குற்றவாளிகளாகப் பார்க்கவில்லை.
ஆனால், ஆயுதப்படையில் உள்ள பாலியல் வல்லுறவு, கொலைகள் போன்ற கோடிய குற்றங்களை செய்தவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் தான் படையினர், போரில் ஈடுபட்டனர். அவர்களை நாம் போர்க்குற்றவாளிகளாக பார்க்கவில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.