அமரர் விஜயகுமாரதுங்க தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தீவிர முனைப்பு காட்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிசெப் கல்லூரியில் அண்மையில் விஜயகுமாரதுங்க நினைவு தின நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 13ம் திருத்தச் சட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்கள் அச்சம் கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் விஜயகுமாரதுங்க முன்வந்து இந்த தீர்வுத்திட்டத்தை அமுல்படுத்த முயற்சி எடுத்தார்.
விஜயகுமாரதுங்கவுடன் இணைந்து அரசியல் செய்ததில்லை, நானும் அவரும் எதிர் எதிர் மேடைகளிலேயே அரசியல் நடத்தியிருக்கின்றோம்.
நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் விஜயகுமாரதுங்க ஈடுபட்டிருந்தார்.
83ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது மக்களின் உயிர்களை பாதுகாக்க தவறியதாகவே அவர் எமது அரசாங்கம் மீது விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென திடமான நிலைப்பாட்டில் விஜயகுமாரதுங்க இருந்தார்.
13ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்த காரணத்தினால் விஜயகுமாரதுங்க தனது உயிரையும் இழக்க நேரிட்டது.
இதேவேளை, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.