பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுன், நடிகை அமலா தம்பதியின் மகன் அகில். நாகார்ஜுனின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் காதல் மலர்ந்து, இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
அகிலும், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜி.வி.கே.ரெட்டியின் பேத்தி ஸ்ரேயா பூபாலை காதலித்தார். ஸ்ரேயா பூபால் பேஷன் டிசைனராக இருக்கிறார். இவர்கள் காதலுக்கு, இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து, திருமணத்துக்கும் ஏற்பாடு செய்தார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் அகில், ஸ்ரேயா பூபால் நிச்சயதார்த்தம் நடந்தது. மே மாதம் இத்தாலியில் இவர்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இதற்காக ஐதராபாத்தில் இருந்து 700 விருந்தினர்களை அழைத்துச்செல்ல திட்டமிட்டனர். அவர்களுக்கான விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது.
இத்தாலியில் இவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல்களில் அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது இந்த திருமணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விருந்தினர்கள் ஒவ்வொருவரிடமும் திருமண வீட்டார் தொடர்பு கொண்டு திருமணம் நின்றுபோனதாகவும், இத்தாலி புறப்பட தயாராக வேண்டாம் என்றும் கூறி வருகிறார்கள். திருமணம் ரத்தானதற்கான காரணம் தெரியவில்லை. இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.