சிறுமியொருவருக்கு விடுதியில் அறையொன்றை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் உஸ்வட்கெயாவ பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றின் முகாமையாளர் உட்பட சிறுமியின் காதலலரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்றைய தினம் (10.05.2023) வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மஸ்கெலியைச் சேர்ந்த விடுதி முகாமையாளரும், சிறுமியின் காதலன் எனக் கூறப்படும் ராகமையைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமியும் கண்டுபிடிப்பு
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாடசாலை மாணவியான தமது மகளை கடந்த 7ஆம் திகதி இரவு இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றதாக சிறுமியின் தாயார் கடந்த 8ஆம் திகதியன்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சிறுமியின் காதலன் என கூறப்படும் இளைஞனை கைது செய்துள்ளார்.
அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, உஸ்வட்டகெயாவ பிரதேசத்தில் உள்ள அழகுசாதன நிலையமொன்றிலிருந்து நேற்று முன்தினம் (09.05.2023) குறித்த சிறுமியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சிறுமி வைத்தியசாலையில் அனுமதி
சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இவ்விருவருக்கும் விடுதியில் அறையொன்றை வழங்கியதாகக் கூறப்படும், குறித்த விடுதி முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முகாமையாளர், 5,000 ரூபாவுக்கு அவர்களுக்கு விடுதியில் தங்குவதற்கு அறை வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.