பாவனா கடத்தலில் பிடிபட்டவர்களின் செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டபோது ஒரு பிரபல நடிகரும், அரசியல்வாதியின் மகன்கள் இரண்டு பேரும் அடிக்கடி அவர்களிடம் பேசி இருப்பது தெரிய வந்துள்ளது. குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தில் இந்த கடத்தலுக்காக ரூ.50 லட்சம் பேரம் நடந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது. நடிகர் திலீப் பெயரும் இதில் அடிபட்டது. ஆனால் அவர் பாவனா கடத்தலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தேவை இல்லாமல் தனது பெயரை இதில் இழுத்து இருப்பதாவும் மறுத்து இருக்கிறார்.
பாவனாவுக்கும், திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. திலீப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தபோது குடும்ப வாழ்க்கையில் தனக்கு நேர்ந்த சங்கடங்களை பாவனாவிடம் மஞ்சு வாரியர் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. பாவனா இந்த பிரச்சினையை முக்கிய நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவித்து மஞ்சுவாரியருக்கு நியாயம் கிடைக்க போராடினார்.
அதன்பிறகு சிலரது தூண்டுதலால் மலையாள பட உலகில் இருந்து பாவனா ஓரம் கட்டப்பட்டார். 2014-ம் ஆண்டில் இருந்து ஒரு வருடம் அவருக்கு மலையாள பட வாய்ப்புகளே இல்லை. இதனால் கன்னட பட உலகுக்கு சென்று அங்கு படங்களில் நடித்து சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். அப்போதுதான் பாவனாவுக்கும் கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
தற்போது பாவனாவுக்கு மலையாள படங்களில் நடிக்க மீண்டும் வாய்ப்புகள் வந்துள்ளன. பிருதிவிராஜ் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில்தான் கடத்தல், பாலியல் தொல்லைகளை பாவனா சந்திக்க நேர்ந்துள்ளது. பாவனாவை ஆபாசமாக வீடியோ படம் எடுத்தவர்கள் அதை வெளியிடாமல் இருக்க ரூ.30 லட்சம் பணம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவில் சிறு சிறு வேலைகள் செய்த நபர்களும் இந்த கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று பாவனா அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து நடிகர் பிருதிவிராஜ் கூறும்போது, “பாவனாவும் நானும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளோம். தற்போது பாவனா, தன்னிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை கிடைப்பது வரை கேமரா முன்னால் வரமாட்டேன் என்று கூறிவிட்டார்” என்றார்.