இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களில் திருப்தியற்றநிலை உருவாகிவருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வுக்கு முன்னதாக ரிட்டா தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
அதில் பிரச்சினைகளை ஒரேஇரவுக்குள் தீர்த்துவிடமுடியாது எனினும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாகியும் சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்படாமை அதிருப்தியை தோற்றுவித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் பிரச்சினையை தீர்க்க சிறப்பான இணைப்புடனான உண்மை, நல்லிணக்கம் மற்றும் காயங்களை ஆற்றக்கூடிய முன்னெடுப்புகள் அவசியமானவையாகும்.
சில விடயங்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கி அவற்றை தீர்க்கவேண்டும்.
சிறுபான்மையினத்தவரின் அரசியல் விடயங்களில் அர்ப்பணிப்புக்களுக்கு முன்னிடம் கொடுக்கப்படவேண்டும்.
இலங்கையின் வடக்குகிழக்கில் படையினர் கையகப்படுத்தியுள்ள காணிகள் உடனடியாக சொந்தக்காரர்களிடம் திருப்பியளிக்கப்படவேண்டும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை வழங்காமல் இருக்கும் காரணங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இந்த நிலையில் இன்னும் படையினர் வசப்படுத்தி வைத்திருக்கும் 6ஆயிரத்து 124 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு சொந்தக்காரர்களிடம் அவை கையளிக்கப்படவேண்டும் இந்த நிலையில் நட்ட ஈடுகளும் வழங்கப்படவேண்டும்.
இதன்போதே இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பமுடியும் என்றும் ரிட்டா குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகால போருக்கு பின்னர் நல்லிணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.இந்த நிலையில் அதற்கு பாதகமான எந்த நடவடிக்கைகளையும் புறக்கணிக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளையும் அரசாங்கம் முன்னெக்கவேண்டும் என்றும் ரீட்டா ஐசக் டியோயே இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.