இந்தியா – மதுரையில் வசிக்கும் இலங்கை வம்சாவழியான மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு பரீட்சையில் உயரிய புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் மருத்துவத்துறையில் அவரால் கல்வி கற்கமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆணையூர் ஏதிலிகள் முகாமைச் சேர்ந்த மாணவியான யு.திரிதுஷா என்ற மாணவியே 6 பாடங்களிலும் மொத்தமாக 600க்கு 591 என்ற புள்ளியினை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தனது மதிப்பெண்கள் குறித்து மகிழ்ச்சியாக இருந்தாலும், தனது ‘ஏதிலி அந்தஸ்து’ காரணமாக தனது கனவை அடைய முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இந்திய விதிமுறைகளின் படி, இலங்கைத் தமிழ் ஏதிலிகள் மருத்துவப் படிப்புகளைத் தொடர அரசாங்க ஒதுக்கீட்டின் கீழ் தகுதியற்றவர்கள். இருப்பினும் ஏனையத்துறைகளில் கல்வி கற்கலாம்.
முடிவை மாற்றிக்கொண்ட மாணவி
அறிவியலைத் தேர்ந்தெடுத்து மருத்துவராக வேண்டும் என்று தாம் ஆசைப்பட்டதாக குறிப்பிட்ட மாணவி தற்போது அந்த முடிவை மாற்றி வணிகவியலில் கல்வி பயின்று கணக்காய்வாளராக வரவேண்டும் என்று ஆசைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஆணையூர் இலங்கை ஏதிலிகள் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சுமார் 50 மாணவர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.