தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதை கண்டித்து தி.மு.க. சார்பில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
தென்சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் ஆலந்தூரில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நானும் தி.மு.க.வில் உறுப்பினர்தான். இது ஒரு கட்சியின் பிரச்சினை கிடையாது. தமிழகத்தின் பிரச்சினை. அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அப்பா தெளிவாக அறிக்கை வெளியிட்டிருந்தார். நானும் மக்களோடு மக்களாக உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளத்தான் சென்றேன்.
கட்சியில் எனக்கு பதவி எல்லாம் கொடுக்கவில்லை. தேர்தலில் போட்டியிட சீட் கேட்பேன் என்று சொல்லவில்லை. கலைஞரின் பேரன், மு.க.ஸ்டாலினின் மகன் என்பதால் முக்கியத்துவம் கொடுத்துவிடுகிறார்கள். வலுக்கட்டாயமாக இழுத்து மேடையில் அமர வைத்துவிட்டார்கள்.
நிறைய மாணவர்கள், பெண்கள் பேசியதை கேட்டேன். இந்த ஆட்சியின் மீது அவர்களுக்கு இருக்கும் அதிருப்தியை உணர்ந்தேன். உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரப்போகிறது. அதில் மக்களின் உணர்வு வெளிப்படும்.
தற்போதைய ஆட்சி சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து என்னிடம் கருத்து கேட்கிறீர்கள். அதற்கெல்லாம் கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை.
ஒரு பார்வையாளனாக கேட்டால், அரசின் மீது அதிருப்தியில் உள்ளேன். சிறையில் இருந்து கொண்டு ஒருவர் ரிமோட் மூலம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.
சினிமாவில் நடிப்பதால் நிறைய மக்களோடு பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. நான் மட்டுமல்ல ஒட்டு மொத்த மக்களும் இந்த ஆட்சியின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.
கூவத்தூரில் நடந்த காமெடியை அனைவருமே பார்த்தோம். நானும் தேர்தலில் வாக்களித்துள்ளேன். அந்த உரிமையில் போராட்டத்தில் கலந்து கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.