ஹம்பாந்தேட்டை – தங்காலை பொலிஸ் பிரிவில் வாகன விபத்தில் 7 மாத குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் தாய் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று (13.05.2023) இடம்பெறுள்ளது.
தங்காலைப் பகுதியிலிருந்து அங்குனுகொலபெலஸ்ஸ நோக்கிப் பயணித்த வான் ஒன்றும் ரன்னவிலிருந்து தங்காலை நோக்கி வந்த லொறி ஒன்றும், ஒன்றுடன் ஒன்று மோதியதில் வானில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் காயமடைந்தனர். அதேவேளை, லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளார்.
வைத்தியசாலை அனுமதி
இந்நிலையில், வானில் பயணித்த ஐந்து பேரும் லொறியின் சாரதியும் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதையடுத்து வானில் பயணித்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள குழந்தையின் தாய் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறியின் சாரதி உறங்கியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.