பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகையை முன்னிட்டு, நாளை (வெள்ளிக்கிழமை) கோவை மாநகரில் தாற்காலிகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘ ஈஷா யோக மையத்தில் ஆதியோகியின் சிலை திறப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். எனவே, அவர்களின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலை, சுங்கம் புறவழிச் சாலை, உள்ளிட்ட பல வழிகள் ஊடாக ஈஷா யோக மைத்துக்குச் செல்ல உள்ளதால், அந்த பகுதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முக்கியப் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு, அவர்கள் பயணிக்கும் பாதைகளில் இரு, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது. கனரக வாகனங்கள் காலை 8 முதல் இரவு 9 மணி குறித்த சாலைகளை தவிர்த்து மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.