- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று இரவு கொல்கத்தா நைட் ரைடர்சை சந்திக்கிறது.
- மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதல் ஜெய்ப்பூரில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், இன்று 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது.
எம்.எஸ்.டோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு தொடரில் 12 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
சென்னை அணி சொந்த மண்ணில் மும்பை, டெல்லி அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்த கையோடு இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
சென்னை அணியில் பேட்டிங்கில் டேவன் கான்வே (5 அரைசதத்துடன் 468 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாட் (408 ரன்கள்), ஷிவம் துபே, ரகானேவும், பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே (19 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (16 விக்கெட்), பதீரனா, மொயீன் அலி, தீக்ஷனாவும் அசத்தி வருகிறார்கள். கொல்கத்தாவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் சென்னை அணி கூடுதல் நம்பிக்கையுடன் செயல்படும்.
நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் சரண் அடைந்ததால் அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்த கொல்கத்தா அணி எஞ்சிய ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்து ஆறுதல் அடைய முயற்சிக்கும்.
அந்த அணியில் பேட்டிங்கில் வெங்கடேஷ் அய்யர் (371 ரன்கள்), ரிங்கு சிங் (353 ரன்கள்), கேப்டன் நிதிஷ் ராணா (348 ரன்கள்) ஜேசன் ராய், ரமனுல்லா குர்பாசும், பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் ஷர்மா, ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரைனும் அச்சுறுத்தல் அளிக்கக் கூடியவர்கள். அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஒருசேர எடுபடாதது பின்னடைவாக உள்ளது.
சென்னை அணியை பொறுத்தமட்டில் இந்த ஆட்டத்தில் வாகை சூடினால் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை உறுதி செய்து விடலாம் என்பதால் வெற்றிக்காக எல்லா வகையிலும் வரிந்து கட்டும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க கொல்கத்தா அணியும் போராடும். எனவே இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சொந்த மண்ணில் நடைபெறும் கடைசி லீக்கான இதனை வெற்றியுடன் முடித்து ஆதிக்கத்தை தொடரும் ஆவலுடன் இருக்கும் சென்னை அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவும் பக்கபலமாக இருக்கும்.
மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதல் முன்னதாக ஜெய்ப்பூரில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும். சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 575 ரன்கள்), ஜோஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயரும், பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஸ்வின், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மாவும் நல்ல பார்மில் இருக்கின்றனர்.
பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளியுடன் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் பிளிஸ்சிஸ் (576 ரன்கள்), விராட் கோலி (420 ரன்கள்) மேக்ஸ்வெல்லும், பந்து வீச்சில் முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், ஹசரங்கா, கரண் ஷர்மா, விஜய்குமார் வைஷாக்கும் வலுசேர்க்கிறார்கள்.
இந்த ஆட்டம் இரு அணிக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இரு அணிகளும் தங்களது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த பலப்பரீட்சையில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.