உலக கிரிக்கெட் அரங்கில் பந்து வீச்சாளர்களை அச்சுறுத்திவரும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி குறித்து, அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் வாஹ் புகழாரம் சூட்டியுள்ளார்.
நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியா வந்துள்ள அவுஸ்ரேலிய அணி, இத்தொடரில் கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கும் என பலரும் கூறிவருகின்ற நிலையில், சமீபகாலமாக அபாரமாக துடுப்பெடுத்தாடி வரும் கோஹ்லி, இத்தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு எந்த சலுகையும் வழங்கமாட்டார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இது நவீனகால இந்திய அணி. விராட் கோஹ்லி நாம் எப்படி கிரிக்கெட்டை விளையாடுகிறோமோ அப்படி விளையாடக்கூடியவரே. அவர் நம் முகத்தருகே நிற்பார், தைரியமான முடிவுகளை எடுத்து அதில் நிற்பார். அவர் ஒரு பயங்கரமான போட்டியாளர், அவரைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்லை என்றே நினைக்கிறேன்.
ஒவ்வொரு பந்துக்கும் முன்னுரிமை அளிக்கிறார். அதாவது தன் வாழ்க்கையின் முக்கியமான பந்தே இதுதான் என்பது போல் துடுப்பெடுத்தாடுகிறார். இதனை அவர் துடுப்பாட்டத்தில் மட்டுமல்ல, களத்தில், அணித்தலைவர் பொறுப்பிலும் கடைபிடிக்கிறார். மிகவும் கடினமான எதிர் அணி வீரர் கோஹ்லி, அவர் கடினமாக துடுப்பெடுத்தாடுவார். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஒரு மகத்தான வீரர். எனவே அவரைப்போல உணர்வுடன் தான் அந்த அணி விளையாடும். எவ்வளவு விரைவில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தில்தான் போட்டியை அவர் நகர்த்துவார். என கூறினார்.