- டோனி ரசிகர்களை பார்த்து கையை அசைத்து நன்றி என்று தெரிவித்தார்.
- முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஓடி வந்து தன் சட்டையில் டோனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியின் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டம் கடைசி லீக் ஆட்டமாகும். இதனால் போட்டி முடிந்ததும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
இதனையடுத்து, டோனி ரசிகர்களை பார்த்து கையை அசைத்து நன்றி என்று தெரிவித்தார். பிறகு டென்னிஸ் பந்துகளை மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மீது வீசினார். இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் டோனியை பார்த்து ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர்.
டோனி மைதானத்தில் தன் அணியினருடன் நடந்து வந்துக்கொண்டிருந்தபோது முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஓடி வந்து தன் சட்டையில் டோனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.
இவரையடுத்து, கொல்கத்தா வீரர்கள் ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியும் தன் அணி சட்டையை கொண்டு வந்து டோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்றனர்.
சமீபத்தில் டோனி இந்த ஐபிஎல் சீசன் முடிந்ததும் விடை பெற்றுவிடுவாரோ என்று சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்களுக்கு, திடீரென்று லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் ‘இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை’ என்று வர்ணனையாளரிடம் தெரிவித்து ரசிகர்களை இன்ப கடலில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியும் டோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.