ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்படுகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்த சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.
ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதால் கர்நாடகாவில் உள்ள பரப்பர அக்ஹகார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு உள்ளார்.
சசிகலாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதிய முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்திருந்ததால் அவருக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்து 15 நாளில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த 18-ந்தேதி தமிழக சட்ட சபையில் நம்பிக்கை தீர்மானத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.
அப்போது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பேசும்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இல்லையென்றால் எம்.எல்.ஏ.க்கள் 1 வாரம் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து விட்டு வந்ததும் வாக்கெடுப்பு நடத்தலாம் என்று வலியுறுத்தினார்கள்.
ஆனால் சபாநாயகர் இதை ஏற்கவில்லை. அப்போது தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்கள். இதனால் சபையில் பயங்கர அமளி ஏற்பட்டது. புத்தகங்கள் கிழித்து வீசப்பட்டன. மைக்குகள் உடைக்கப்பட்டன.
கடுமையான அமளியின் இடையே 2 முறை அவை நடவடிக்கைகளை சபாநாயகர் தனபால் தள்ளி வைத்தார்.
அப்போது அமளி நீடித்ததால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்ற அவைக்காவலருக்கு சபா நாயகர் உத்தரவிட்டார். அதன்பிறகு சபாநாயகர் தனது அறைக்கு சென்று விட்டார்.
சபாநாயகர் அவையில் இல்லாத சமயத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர் சேஷசாயி தலைமையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சபை வராண்டாவில் நின்று கொண்டு தி.மு.க. எம்.எல். ஏ.க்களை வெளியேற்றினார்கள்.
அம்பத்தூர் துணை கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட சில ஐ.பி.எஸ். அதிகாரிகள் சபை காவலர்களின் உடையை அணிந்து கொண்டு சட்ட சபைக்குள் சென்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை குண்டு கட்டாக தூக்கி வந்து வெளியேற்றினார்கள்.
இதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் சட்டை கிழிந்தது.
போலீசார் பூட்ஸ் கால்களால் எட்டி உதைத்தும், கைகளால் அடித்தும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை இழுத்து வெளியே தூக்கி வந்ததில் பல எம்.எல்.ஏ.க்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் முழுவதுமாக வெளியேற்றிய பிறகு நம்பிக்கை ஓட்டெ டுப்பை சபாநாயகர் நடத்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
அரசுக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு எதிராக 11 எம்.எல்.ஏ.க்களும் வாக்கெடுப்பில் பங்கேற்றனர் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
சபாநாயகரின் இந்த செயல் சட்ட விரோதம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். இது தொடர்பாக கவர்னரிடம் புகார் தெரிவித்ததோடு சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சபாநாயகரின் ஒருதலை பட்ச நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை சந்தித்து சட்டசபையில் நடந்த சம்பவங்கள் பற்றி புகார் மனு கொடுக்கவும் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டிருந்தார். அவருக்கு இன்று மாலை 7 மணிக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. உடன் சென்றுள்ளனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் பிணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டு அங்கிருந்து சட்ட சபைக்கு அழைத்து வரப்பட்டது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் புறக்கணித்தது, அதன் பிறகு நடந்த அமளி, தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டது உள்ளிட்டவை, குறித்து மு.க. ஸ்டாலின் ஜனாதிபதியிடம் புகார் அளிக்க உள்ளார்.