ஐபிஎல் தொடரில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஒப் சுற்றுக்கு தெரிவானது.
நணயச்சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை குவித்தது.
அதிரடி காட்டிய ஷுப்மன் கில்
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஷுப்மன் கில் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ஓட்டங்களை விளாசினார். சாய் சுதர்சன் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்து 47ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.
ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார் அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. குஜராத் அசத்தலாக பந்துவீச, முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் ஐதராபாத் அணி 59 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட் இழந்து தத்தளித்தது.
தனிநபராக போராடிய கிளாசன்
கிளாசன் மட்டும் தனியாகப் போராடி அரை சதம் கடந்தார். 8-வது விக்கெட்டுக்கு கிளாசனுடன் புவனேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. பின்னர் கிளாசன் பவுண்டரி, சிக்சர்களை விளாசினார். கிளாசன் 64 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் குமார் 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஐதராபாத் அணி 154 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. அத்துடன் பிளே ஒப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது. குஜராத் சார்பில் முகமது ஷமி, மோகித் சர்மா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக சுப்பமன் கில் தெரிவானார்.