மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (15.05.2023) மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள கரிசல் கிராமப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பெரிய கரிசல் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய எம்.ஜலீல் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள கரிசல் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் போதைப்பொருள் உள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
கத்தியால் தாக்க முயற்சி
இதனையடுத்து, குறித்த வீட்டிற்குச் சென்ற விசேட அதிரடிப்படையினர், அங்குச் சோதனைகளை முன்னெடுக்க முயன்றபோது, குறித்த நபர் கத்தியை எடுத்துத் தாக்க முயன்றுள்ளார்.
இதன்போது அதிரடிப்படையினர் வைத்திருந்த துப்பாக்கியால், குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் குறித்த நபருக்குக் வயிறு மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
உடனடியாக குறித்த நபர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.