முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் சர்ச்சைக்குரிய பிரசங்கிகளான உபேர்ட் ஏஞ்சல் மற்றும் ஜெரோம் பெர்னாண்டோவிற்கும் இடையிலான தொடர்புகள் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளின் ஒரு பகுதியாக ஆராயப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெரோம் பெர்னாண்டோ பௌத்தம் மற்றும் பிற மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டது தொடர்பாக அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எனினும் நீதிமன்றின் உத்தரவை பெறுவதற்கு முன்னர், அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் உபேர்ட் ஏஞ்சல் மற்றும் ஜெரோம் பெர்னாண்டோவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜதந்திர சலுகை
முன்னதாக 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில், இலங்கையில் இருந்த ஜெரோம் பெர்னாண்டோவை சந்திப்பதற்காக, சிம்பாப்வேயின் பிரசங்கியான யூபெர்ட் ஏஞ்சல், இலங்கை வந்திருந்தார்.
இந்தநிலையில் அவர் தமக்கு வழங்கப்பட்ட ராஜதந்திர சலுகையை பயன்படுத்தி, தங்கக் கடத்தல் திட்டத்தின் மூலம் மில்லியன் கணக்கான டொலர்களை சுத்தப்படுத்த முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2021 மார்ச்சில்; சிம்பாப்வேயின் ஜனாதிபதி எம்மர்சன் மனங்காக்வாவால் தூதுவராகவும் ஜனாதிபதித் தூதராகவும் நியமிக்கப்பட்ட யூபெர்ட் ஏஞ்சல், தனது இராஜதந்திர அந்தஸ்தைப் பயன்படுத்தி நாட்டிற்கு அதிக அளவு பணத்தை எடுத்துச் செல்ல முடியும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.