- மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.
- பக்கவாதம் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் இவற்றை பின்பற்ற வேண்டும்…
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக அளவில் சர்க்கரையின் அளவு இருந்தால் ஏன் பக்கவாதம் ஏற்படுகிறது? அதற்கான சரியான காரணம் என்ன? அதை தடுப்பதற்கான வழிமுறைகள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பக்கவாதம் வரக்கூடிய வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இரண்டு நிமிடத்திற்கு ஒருவர் பக்கவாத நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாவது கீழ்கண்ட காரணங்களால் என கண்டறியப்பட்டுள்ளது.
1) நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாத போது உடலில் உள்ள ரத்த நாளங்களில் அழற்சி (இன்பளமேஷன்) ஏற்பட்டு, ரத்த நாளங்கள் பாதிப்படைகின்றது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.
2) பாதிப்படைந்த ரத்த நாளங்களில், தமனிக்குழாய் தடிப்பு (அதிரோஸ்கிலோரிடக் பிளேக்) ஏற்பட்டு ரத்த நாளங்களில் அடைப்பு உருவாகிறது. இது மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை குறைத்து பக்கவாதத்தை ஏற்படுத்துகின்றது.
3) பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு கூடுதலாக இருதய நோய், அதிக கொலஸ்ட்ரால், சிறுநீரக பாதிப்பு, ரத்த கொதிப்பு, உடல் பருமன் போன்றவையும் இருப்பதால் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாகிறது.
பக்கவாதம் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் இவற்றை பின்பற்ற வேண்டும்:
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்தல், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்தல், புகை பிடித்தல் மற்றும் மது பழக்கத்தை விட்டொழிதல், உடல் எடை குறைத்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த பால், மீன் அல்லது கோழி இறைச்சி, முட்டையின் வெள்ளை போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல்.