பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தழிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகின்றது,
இதன்படி முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதகளில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் நந்திக்கடலில் உயிர் நீத்த உறவுகளுக்கு இன்று காலை மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்திவேண்டி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், வடக்கில் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்தி பூஜைகள் நடத்தப்பட்ட்டுள்ளது.
இதேவேளை தழிழன அழிப்புக்கு நீதி கோரி 14 ஆண்டான இன்று புலம் பெயர் தேசங்களின் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்படி பிரான்ஸில் Place de la Bastille எனும் பகுதியில் கவனயீர்ப்பு ஒன்று கூடல் இடம்பெறவுள்ளது.
தமிழ் தேசிய உயர்வோடு தழிழர் நாம் இலட்சிய வேட்கையுடன் கொள்கை வழி நின்று நீதிக்காய் போராடுவோம் அணிதிரள்வோம் என்ற தொனிப் பொருளின் கீழ் குறித்த ஒன்று கூடல் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பல்வேறு இழப்புகளையும், வேதனைகளையும் கொண்ட இரத்தம் சிந்தியதாக காணப்படுகின்றது,
இந்தப் போராட்டத்தின் மூலம் பலர் செய்த தியாகங்களை தமிழர்கள் மனதில் கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகும். இன்று அபிவிருத்தி பற்றி பேசும் தமிழர்கள், இந்த இழப்புகள் எதற்காக இடம் பெற்றன என்பது பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.