ஆளுநர் வித்யாசாகர் ராவ்அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவருக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்காதது ஏன்? என்பதற்கு தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து, www.dailyo.in என்ற ஆங்கில இணையதளத்தில் வித்யாசாகர் ராவ் தெரிவித்திருப்பதாவது:-
அண்மையில், தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் சூழ்நிலைகளின் போது, ஊடகங்களிலும், செய்திகளிலும் பரபரப்பாக எனது பெயர் விமர்சனத்திற்கு உள்ளானதைப் போன்று, 45 ஆண்டுக்கால எனது அரசியல் வாழ்வில் இதுவரை விமர்சிக்கப்பட்டதில்லை.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவை தமிழக முதல்வராக நான் பதவிப்பிரமாணம் செய்து வைக்காததற்கான காரணம் மற்றும் என்னுடைய முடிவு, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் நிரூபணமானது. (சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் 4 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது).
அண்மைக்கால தமிழக அரசியல் சூழ்நிலைகளின்போது, நான் எடுத்த அனைத்து முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சசிகலாவைப் பொறுத்தவரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல. அவரை சட்டமன்றக் கட்சித்தலைவராக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை விரைவில் வழங்கவிருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
அதுபோன்ற சூழ்நிலையில், சசிகலாவுக்கு முதல்வர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது தொடர்பாக, எந்த முடிவையும் எடுக்கும் முன், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருப்பது சிறந்தது என எனக்குத் தோன்றியது.
உடல்நலக் குறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரைப் பார்க்க ஓரிருமுறை செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அப்படி ஒருமுறை நான் சென்றிருந்த போது, தான் குணமடைந்து வருவதைக் குறிக்கும் வகையில், ஜெயலலிதா தனது கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தார்.
தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின்போது, சட்ட ஆலோசனை கோரினீர்களா?’ என சிலர் என்னைக் கேட்கிறார்கள்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மற்றும் சட்ட நிபுணர்கள் சோலி சொராப்ஜி, கே. பராசரன் ஆகியோருடன் இதுதொடர்பாக நான் ஆலோசனை நடத்தினேன்.
அந்த ஆலோசனைகள் பற்றிய முழு விவரங்களையும் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு அறிக்கையாக அனுப்பி வைத்தேன்.
அதில் என்ன இடம்பெற்றிருந்தது என்பதை ஒரு ஆளுநர் என்ற முறையில், என்னால் பகிர்ந்துகொள்ள இயலாது.
தமிழக அரசியல் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட போது, எனது நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவோ, எதிராகவோ கருத்துகளைத் தெரிவித்த ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் விவாதங்களில் பங்கேற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றி” என்று கூறினார்.
தமிழக அரசியல் நிலவரம் தவிர்த்து, வித்யாசாகர் ராவ் தனது குழந்தைப்பருவம் முதல் பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.
என்னைப் பொறுத்தவரை எனது குழந்தைப் பருவம் முதல் பல்வேறு காலகட்டங்களில் எதிர்நீச்சல் போட்டே வந்துள்ளேன்.
தெலங்கானா மாநிலத்தில் நக்ஸல் இயக்கத்தினர் ஆதிக்கம் நிறைந்த கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான்.
எனது மூத்த சகோதரர்கள் ராஜேஸ்வர ராவ், ஹனுமந்த ராவ் இருவரும் கம்யூனிஸ கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.
நான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் கவரப்பட்டேன். உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர் நாக பூஷணத்தின் சேவை என்னை அந்த இயக்கத்தின்பால் ஈர்த்தது, இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
கல்லூரி நாட்களில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் எனக்கு உத்வேகம் அளித்தார். அவரது கொள்கைகள், பேச்சுகள் மற்றும் கட்சித் தொண்டர்களை நோக்கிய அவரது பார்வை மற்றும் திறமை என்னை மிகவும் கவர்ந்தது.
மிசா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, வாரங்கல் மத்திய சிறையில் நான் அடைக்கப்பட்டேன்.
1980-ம் ஆண்டுகளில் பிரிக்கப்படாத ஆந்திர மாநில சட்டப்பேரவையில் நானும், எனது அண்ணன் ராஜேஸ்வர ராவும், முறையே பா.ஜ.க மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களாக எதிர்பாராத வகையில் இருக்க நேரிட்டது.
பல்வேறு பிரச்னைகளில், கொள்கை அடிப்படையில் சட்டசபையில் நாங்கள் சண்டையிட நேரிட்டது. ஆனால், அது வீட்டில் எங்களிடையேயான உறவை ஒருபோதும் பாதித்ததில்லை.
எனது சகோதரருக்கும், எனக்கும் இடையே 22 வயது வித்தியாசம், என்னை கம்யூனிஸத்தில் இருந்து ஒதுங்கி இருக்க வைத்தது என்று கூறலாம்.
1971-ம் ஆண்டு உஸ்மானியா சட்டக்கல்லூரி மாணவர் சங்கத்தின், அகில பாரத வித்யார்த்தி பரிஷத் பிரதிநிதியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, எனது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது.
கரீம்நகர் நீதிமன்றத்தில் 1985-ம் ஆண்டுவரை குற்றவியல் சட்ட வழக்கறிஞராக பணியாற்றி வந்தேன். அதன் பின்னரே ஆந்திர மாநில சட்டசபைக்கு முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
ஆளுநர் மாளிகைக்கு நான் வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
மகாராஷ்டிர மாநில ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதை, தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தே அறிந்து கொண்டேன்.
ஒரு தந்தை தனது குழந்தைகளை எப்படி கணிப்பாரோ, அதுபோல கட்சி தனது தொண்டர்களை கணிக்கிறது என்று நான் கருதுகிறேன்.
இந்திய வரலாற்றின் மீது நான் கொண்டுள்ள பற்று காரணமாக, மும்பை ஆளுநர் மாளிகையில் மூன்று நினைவுச் சின்னங்களை ஏற்படுத்தியுள்ளேன்.
ஆளுநர் பணிக்கு மத்தியில் தெலுங்கு இதழ்களில் பல்வேறு கட்டுரைகள் மற்றும் கவிதைகளையும் நான் எழுதியுள்ளேன். அவற்றைச் சேகரித்து புத்தகமாகவும் வெளியிட்டுள்ளேன்.
மும்பை ஆளுநர் மாளிகையில் கடந்த இரண்டரை ஆண்டுக்கால அனுபவத்தையும் புத்தகமாக எழுதியுள்ளேன்.தொடர்ந்து எழுதுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் ஆளுநர்.