கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தில் நேற்று (18.05.2023) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடவத்தை, சூரியபாலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் நின்றிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த இடத்திற்கு வந்த மூவர் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அந்த நபர்கள் காயமடைந்த நபரின் மனைவியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் சகோதரர் ஒருவரும், சகோதரரின் மகனும் மேலும் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கணேமுல்ல மற்றும் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 56, 20 மற்றும் 25 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணித் தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களுடன் துப்பாக்கி சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட ரைபிள் ரக துப்பாக்கி மற்றும் அவர்கள் வந்த முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.