- விராட் கோலி 6 சதங்களையும் பெங்களூரு அணிக்காக மட்டுமே அடித்துள்ளார்.
- சேசிங் செய்யும் போது 2 சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான 65வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
இந்த போட்டியில் அதிரடியாக சதம் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். 2019-க்குப்பின் அவர் சதம் அடித்துள்ளார். சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த கிறிஸ் கெயில் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில், விராட் கோலி தலா 6 சதங்கள் அடித்து முதல் இடத்திலும் ஜோஸ் பட்லர் 5 சதங்கள் விளாசி 2-வது இடத்திலும் உள்ளார்.
விராட் கோலி 6 சதங்களையும் பெங்களூரு அணிக்காக மட்டுமே அடித்துள்ளார். அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ளார்.
அந்த பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார். பெங்களூருவுக்காக 6 முறை அடித்துள்ளார். 2-வது இடத்தில் கிறிஸ் கெயில் உள்ளார். 5 பெங்களூருவுக்காகவும் 1 பஞ்சாப்புக்காகவும் அடித்துள்ளார். ராஜஸ்தானுக்காக 5 சதங்கள் விளாசிய ஜோஸ் பட்லர் அடுத்த இடத்தில் உள்ளார்.
மேலும் சர்வதேசம் மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மா மற்றும் ராகுல் சாதனை உடைத்து விராட் கோலி புதிய வரலாறு படைத்துள்ளார்.
அந்த பட்டியல்: 1. விராட் கோலி : 7* 2. ரோகித் சர்மா : 6 3. கேஎல் ராகுல் : 6
ஐபிஎல் வரலாற்றில் சேசிங் செய்யும் போது 2 சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் வீரேந்திர சேவாக், பால்வல்தாட்டி, தேவ்தூத் படிக்கல், அம்பத்தி ராயுடு, ஷிகர் தவான் ஆகியோர் தலா 1 சதம் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
மேலும் 2011, 2013, 2015, 2016, 2018, 2023* ஆகிய 6 சீசன்களில் முறையே 557, 634, 505, 973, 530, 538* என 500-க்கும் மேற்பட்ட ரன்களை விராட் கோலி அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 500+ ரன்கள் அடித்த இந்திய வீரர் (6) என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன் ராகுல் கேஎல் 5 முறை மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சிக்ஸருடன் சதமடித்த வீரர் (3) என்ற சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் ஹாசிம் அம்லா 2 முறை சிக்ஸருடன் சதமடித்ததே முந்தைய சாதனையாகும்.