இந்திய வெளியுறவுத்துறை செயலாளரது அண்மைய இலங்கை விஜயமானது, தமிழர் விவகாரத்தில் இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதற்காக அன்றி, இந்தியாவினுடைய தேசிய நலன்களை முதன்மைப்படுத்துவதாகவே அமைந்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் தேசிய சமாதான பேரவை இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர்களது பிரச்சினையை விட தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவே இந்தியா அதிக கவனஞ்செலுத்துகின்றது.
தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெஹான் பெரேரா, சீனாவுடன் இலங்கை செய்துகொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய ஒப்பந்தம் குறித்தும், திருகோணமலை துறைமுகத்தில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதார நடவடிக்கைகளில் இலங்கை ஆர்வம் காட்டாமல் இருப்பது தொடர்பிலும் இந்தியாவின் கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் தெரிவிப்பதே பிரதான நோக்கமாக இருந்திருக்கும்.
காலங்காலமாக நீடித்து வரும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையை தீர்ப்பது புதுடெல்லிக்கு எளிதான விடயமென்றாலும் மோடி அரசாங்கம் அதனை செய்யவில்லை.
அத்தோடு, வடக்கு கிழக்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு மேலதிக உதவிகளை செய்யவேண்டுமென தனிப்பட்ட ரீதியாகவும் வெளிப்படையாகவும் இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் நிலைமாறுகால நீதிப் பொறிமுறை தொடர்பில் இன்று பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்ற நிலையில், ஜனாதிபதி மைத்திரி மற்றும் ரணிலில் தேசிய அரசாங்கமானது பொறுப்புக்கூறல் செயற்பாட்டிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கின்றது.
இவ்வாறான விடயங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதி காத்து வருவதாகவும், தற்போது தமிழர் விவகாரத்தில் பல்வேறு பிரச்சினைகள் மேலெழுந்துள்ள நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளினூடாக இலங்கையை கையாள்வதற்கு இந்தியாவிற்கு இது நல்ல தருணமாக இருக்கின்ற போதிலும் இந்தியா ஆர்வம் இன்றி இருப்பதாகவும் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளரது அண்மைய விஜயம் தொடர்பில் தமிழ் ஊடகங்களும் தமிழ் அரசியல் தரப்புக்களும் பல்வேறு எதிர்பார்ப்புக்களையும் நம்பிக்கைகளையும் வெளியிட்டு வருகின்ற நிலையில் தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளரும் அரசியல் ஆய்வாளருமான ஜெஹான் பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளமை கவனத்திற்குரியது.