- 17 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது.
- டெல்லி அணி 9-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே.அணி டெல்லியை மீண்டும் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப் புக்கு 223 ரன் குவித்தது. இதனால் டெல்லி அணிக்கு 224 ரன் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கான்வே 52 பந்தில் 87 ரன்னும் (11 பவுண்டரி , 3 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்தில் 79 ரன்னும் (3 பவுண்டரி, 7 சிக்சர்), ஷிவம் துபே 9 பந்தில் 22 ரன்னும் (3 சிக்சர்), ஜடேஜா 7 பந்தில் 20 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கலீல் அகமது, நோர்க்கியா, சேட்டன் ஷகாரியா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்னே எடுத்தது. இதனால் சென்னை அணி 77 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கேப்டன் வார்னர் அதிகபட்சமாக 58 பந்தில் 86 ரன்னும் (7 பவுண்டரி, 5 சிக்சர்), எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். தீபக் சாஹர் 3 விக்கெட் டும், பதிரனா, தீக் ஷனா தலா 2 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
சி.எஸ்.கே. பெற்ற 8-வது வெற்றியாகும். 17 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது.
டெல்லி அணியை இந்த சீசனில் 2-வது தடவையாக வீழ்த்தியது. சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் 27 ரன்னில் தோற்கடித்து இருந்தது.
இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-
சி.எஸ்.கே. அணி 12-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்து சாதனை படைத்தற்காக செய்முறை எதுவும் இல்லை. சிறந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கான உகந்த மற்றும் சவுகரியமான சூழலையும், இடத்தையும் உருவாக்கிட வேண்டும். அதற்காக சில வீரர்கள் தங்களின் இடத்தை கூட தியாகம் செய்ய வேண்டும்.
மேலும் அணி நிர்வாகமும் ஒரு நல்ல சூழலை உருவாக்கி கொடுத்து இருக்கிறது. பயிற்சியாளர்கள் குழுவும், உதவியாளர்களும் எங்களுக்கு எப்போதுமே ஊக்கமாக இருக்கிறார்கள்.
வீரர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இல்லையேல் நாம் எதுவும் செய்ய இயலாது. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் (டெத் ஓவர்) பந்து வீசுவதற்கு தன்னம்பிக்கை மிக முக்கியம் என்று நினைக்கிறேன். துஷார் தேஷ்பாண்டே தொடர்ந்து அழுத்தமான சூழல்களில் இருந்து தன்னை மேம்படுத்தி கொண்டார். அவரிடம் தற்போது தன்னம்பிக்கை இருக்கிறது.
பதிரனா டெத் ஓவர்களை வீசுவதற்கென்றே இயல்பான திறமையை பெற்றுள்ளார். தொடர்ந்து அதே வீரர்களுடன் விளையாடும்போது உதவியாக இருக்கிறது.
தனிப்பட்ட சாதனைகளை பற்றி கவலைப்படாமல் அணியின் நலனுக்காக ஆடும் வீரர்களை தேர்வு செய்வதே முக்கியம். வீரர்கள் 10 சதவீத திறனுடன் வந்தாலும் ஓவர்களை அணியில் 50 சதீதம் வரை சிறந்த வீரராக மாற்றலாம்.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
டெல்லி அணி 9-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.