மதுபோதையுடன் பயணிகள் பேருந்தை செலுத்திய சாரதிகள் மூவர் பொலிஸாரினால் இன்று கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டை- ஹங்வெல்ல, புறக்கோட்டை-கடுவல, கொஹிலவத்த-டவுண்ஹோல் ஆகிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் சாரதிகள் மூவரே வௌ்ளம்பிட்டிய பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயணிகள் பேருந்துகளின் சாரதிகள் மதுபோதையுடன் பேருந்துகளை செலுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ பரிசோதனையில் வெளியான தகவல்
குறித்த சாரதிகள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் செலுத்திய பேருந்துகளில் ஏராளமான பயணிகள் இருந்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதிகளின் பேரூந்து உரிமையாளர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து எச்சரித்த பின்னர் பேருந்துகள் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சாரதிகள் மூவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர்களின் குருதியில் போதைப்பொருள் கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.