- கோடை காலத்தில் உணவுக்கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம்.
- பல உணவுகள் நீரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.
கோடை காலத்தில் நிலவும் வெப்பநிலையை உடல் சமாளிப்பதற்கு உணவுக்கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம். ஏனெனில் பல உணவுகள் நீரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உடல் உபாதைகளுக்கு ஆளாக்கிவிடும். வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது தவிர்க்க வேண்டிய 10 உணவுகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு…
1. காபி
நீரிழப்புக்கு வழிவகுப்பதுடன் உடலின் வெப்பநிலையை கூட அதிகரிக்க செய்துவிடும். வெயில் சுட்டெரிக்கும் கோடை காலங்களில் காபியை தவிர்ப்பது நல்லது. முழுவதுமாக கைவிட முடியாவிட்டாலும், காபி பருகும் அளவை குறையுங்கள்.
2. ஊறுகாய்
சோடியம் அதிகம் கலந்திருக்கும் ஊறுகாய் நீரிழிவை ஏற்படுத்தும். மேலும் கோடையில் ஊறுகாயை அதிகமாக சாப்பிடுவதும் அஜீரணத்தை உண்டாக்கும்.
3. உலர் பழங்கள்
உலர்பழங்கள் ஊட்டச்சத்து மிகுந்தவைதான் என்றாலும் கோடையில் அவற்றின் பயன்பாட்டை குறைத்துவிடுங்கள். ஏனெனில் அவை உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும். தேவையற்ற அசவுகரியங்களுக்கு ஆளாக்கிவிடும்.
4. பானங்கள்
கார்பனேற்றப்பட்ட பானங்களை கோடையில் அதிகமாக பருகுவதற்கு பலரும் விரும்புவார்கள். அவற்றுள் அதிக சர்க்கரை கலந்திருக்கும். சட்டென்று நீரிழப்புக்கு வித்திடும்.
5. மில்க் ஷேக்குகள்
மில்க் ஷேக்குகளும் கோடை காலத்தில் விரும்பி உட்கொள்ளப்படும் பானங்களாக இருக்கின்றன. அதிக பால் சேர்க்கப்பட்ட மில்க் ஷேக்குகள் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி அவை கலோரிகளால் நிரம்பி இருக்கும். அவை உடலுக்கு ஆரோக்கியமற்றவை. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் உள்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.
6. காரமான உணவுகள்
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் சமயங்களில் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். அவற்றுள் கலந்திருக்கும் கேப்சைசின் என்னும் சேர்மம் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. நீரிழப்பு, உடல் சூடு, அஜீரணம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
7. பொரித்த உணவுகள்
பஜ்ஜி, வடை, சமோசா மற்றும் பிரெஞ்ச் பிரை போன்ற எண்ணெய்யில் பொரித்தெடுக்கப்படும் அனைத்து வகையான உணவுகளும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். எளிதில் செரிமானம் ஆகாது. எனவே கோடையில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
8. பழச்சாறு
பழச்சாறு பருகுவதில் தவறில்லை. ஆனால் பழங்களை சாப்பிடாமல் வெறுமனே பழச்சாறு உட்கொள்வது நல்லதல்ல. உடலுக்கு தேவையான நார்ச்சத்து பழங்களில் இருந்துதான் கிடைக்கும். பழச்சாறுகளில் அதன் வீரியம் குறைந்திருக்கும். அதனால் பழச்சாறுகளை விட பழங்கள் மற்றும் காய்கறிகள் சிறந்த தேர்வாக அமையும்.
9. மது
மது உட்கொள்வது நீரிழப்புக்கு வழிவகுக்கும். தொண்டை வறட்சி, தலைவலி போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். கோடையில் மது அருந்துவது அதிக வியர்வையை வெளிப்படுத்தும். அதனால் உடலில் அதிக நீரிழப்பு ஏற்படும்.
10. உப்பு உணவுகள்
உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொண்டால் உடல் நீரிழப்புக்கு ஆளாகும். உணவு மற்றும் உடலில் இருக்கும் தண்ணீரை உப்பு உறிஞ்சிவிடும். அதிகப்படியான உப்பு சேர்ப்பது சோம்பல், மயக்கம் போன்ற பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.