ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (23.05.2023) அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார்.
சிங்கப்பூருக்கான தனது ஒரு நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி, சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் மற்றும் அந்நாட்டின் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம்
மே மாதம் 24 முதல் 27 வரை ஜனாதிபதியின் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய அணுகுமுறையின் ஊடாக வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாகவும் இதன்போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, மே 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் டோக்கியோவில் நடைபெறும் “ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28ஆவது சர்வதேச மாநாட்டில்” (Nikkei) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்ற உள்ளார்.
ஜப்பான் – இலங்கை வர்த்தக ஒத்துழைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் – இலங்கை வர்த்தக ஒத்துழைப்பு கவுன்சில் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் தினுக் கொழம்பகே, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் செண்ட்ரா பெரேரா ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.