தமிழ் பெண்கள் மீது இராணுவத்தினர் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்த கருத்துக்கள் தமக்கு கவலை அளிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பெண்களை இராணுவத்தினர் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குகிறார்கள் என்றும், கொழும்பு உட்பட நான்கு இடங்களில் வதை முகாங்கள் இருப்பதாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
மேலும் இது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதில் அளித்துள்ள மகிந்த ராஜபக்ச,
தமிழ் பெண்கள் மீது இராணுவத்தினர் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தக் கருத்துக்கள் கவலையளிக்கின்றன.
சட்ட ஆட்சி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நேர்மையுடன் முயற்சிக்கும் இக்காலக்கட்டத்தில் இராணுவத்தின் நற்பெயர் மற்றும் நல்லிணக்கத் திட்டத்திற்கு பாதகமாக இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் யுத்தம் காரணமாக பாதிப்புக்கு முகங்கொடுத்த தமிழ் பெண்கள், தற்போது அவர்களது சமூகம் மற்றும் படையினரின் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து கண்டிக்கத்தக்கது.
இதேவேளை, தற்போது ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 34 ஆவது அமர்வு இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இது போன்ற கருத்துக்கள் இலங்கை இராணுவத்தினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இந்தக் கருத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் வெளியிட வேண்டும் என மகிந்த கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவியாக சந்திரிக்கா செயற்படுவதாலேயே இலங்கையின் இராணுவம் குறித்து இழிவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
எனவே இது குறித்து அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்திருக்கும் கருத்துக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என இராணுவம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.