பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சியை(பி.டி.ஐ.) தடை செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலனை செய்து வருவதாக கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 9-ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக வந்தபோது, அவரை துணை இராணுவ படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஆதரவாளர்கள் போராட்டம்
இதனை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. லாகூர் படைப்பிரிவு கொமாண்டர் அலுவலகம், மியான்வாலி விமானப்படை தளம் மற்றும் பைசலாபாத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ. கட்டடம் உட்பட பல இராணுவ தளங்களை இம்ரான் கானின் கட்சியினர் சேதப்படுத்தினர். ராவல்பிண்டியில் உள்ள இராணுவ தலைமையகமும் தாக்கப்பட்டது.வன்முறை மோதலில் 10 பேர் பலியானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இராணுவம் மற்றும் பொது சொத்துக்கள் மீது தனது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களை கண்டிக்க இம்ரான் கான் இன்னும் தயங்குவதாக கூறினார்.
கட்சியை(பி.டி.ஐ.) தடை செய்வது குறித்து பரிசீலனை
மேலும் இராணுவ நிலைகளை தாக்கியதால் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை(பி.டி.ஐ.) தடை செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலனை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், இம்ரான் கானின் கட்சியை தடை செய்ய அரசு தீர்மானித்தால் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குறிப்பிட்டுள்ளார்.