இலங்கையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் உலகின் மிகப் பெரிய மாணிக்கக்கல் தொடர்பான மதிப்பீடுகளில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளதாக கோப் குழு அல்லது பொது விவகாரங்களுக்கான குழுவில் தெரியவந்துள்ளது.
ஆசியாவின் ராணி
‘ஆசியாவின் ராணி’ என்று பெயரிடப்பட்ட இந்த மாணிக்கக்கல்லை விற்பனை செய்ய, இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மேற்கொண்ட நடவடிக்கை அவர்களின் தொழில் நிபுணத்துவத்தை தாழ்த்துவதாக உள்ளது என கோப் குழுவின் உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“இந்த குழுவின் முன்னாள் தலைவர்,மிகப்பெரிய மாணிக்கக்கல் ஒன்று கிடைத்துள்ளது. அதன் பெறுமதி பல இலட்சம் என கூறினார்.
குறித்த மாணிக்கக்கல்லின் பெறுமதி 10 இலட்சம் டொலர்கள் என கூறினார்கள் ஆனால் தற்போது 10700 என கையொப்பம் இடப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு இரு வேறு தொகைகள் கூறப்பட்டுள்ளதுடன் அதற்கு ஒருவரே கையெழுத்து இட்டுள்ளார்.அது எவ்வாறு சாத்தியமாகும். மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.”என தெரிவித்துள்ளார்.
காப்புறுதி பெறுமதி
இதேவேளை பத்து இலட்சம் பெறுமதியான மாணிக்கக்கல் விற்பனை செய்யப்படவில்லை எனவும், இவ்வாறான மாணிக்கக்கல் கொத்துக்கள் எல்லா இடங்களிலும் காணப்படுவதாகவும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் ஏற்றுமதி சேவைகள் பணிப்பாளரால் தெரிவித்துள்ளார்.
அங்கு பதிலளித்த ஏற்றுமதி சேவைகள் பணிப்பாளர் அமல் தென்னகோன், மாணிக்கக் கொத்து பொருத்தமான அளவில் வெட்டி மெருகூட்டப்படவில்லை எனவும் இதற்கு வழங்கப்பட்ட தொகை அதன் காப்புறுதி பெறுமதியே எனவும் தெரிவித்தார்.
‘ஆசியாவின் ராணி’ என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை மாணிக்கக் கல் இலங்கையின் ஹொரணை, தல்கஹவில பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கல்லின் எடை 510 கிலோ கிராம். உலகில் மிகப் பெரிய மாணிக்கக் கல்லானது இது Blue Sapphire ரகத்தை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இது தொடர்பான மதிப்பீடுகளின் பின்னர் மாணிக்கக்கல் ஏலத்திற்கு விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.