கம்பளை – வெலிகல்ல, எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கழுத்து நெரித்து கொல்லப்பட்ட நிலையில் 6 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட பாத்திமா முனவ்வராவை கொலை செய்ததாக கருதப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் நேற்று (25.05.2023) முன்னிலைப்படுத்திய போதே கம்பளை பதில் நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
மௌனப் போராட்டத்தில் மக்கள்
குறித்த வழக்கு விசாரணையின் போது, கடுமையான தண்டனை வழங்குமாறு கோரி கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய சேர்ந்த பிரதேச மக்கள் மற்றும் கம்பளை மக்களும் ஒன்றினைந்து கம்பளை நீதிமன்றத்திற்கு முன்பாக மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மொஹமட் அஹமட் என்ற சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கம்பளையில் கடந்த (7.05.2023)ஆம் திகதி காணாமல் போயிருந்த பாத்திமா முனவ்வரா 6 நாட்களுக்கு பிறகு (13.05.2023)ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
யுவதி காணாமல் போனமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் (12.05.2023) கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஆடுகளுக்கு புல் வெட்டுவதற்காக சென்ற போது, அவ்வழியாக வேலைக்கு சென்ற யுவதியிடம் சந்தேகநபர் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தநிலையில், யுவதி அதற்கு மறுப்பு தெரிவித்தமையால் சந்தேக நபர் யுவதியை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று யுவதியை அங்கேயே கொலை செய்து, கொலையின் பின்னர் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டதாக வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.