நாடாளுமன்றத்தில் செயற்படும் பிரதான குழுக்களில் ஒன்றான தேசியப் பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் இந்த வாரம் கூடிய நாடாளுமன்றக் குழுவில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியேறவுள்ள நிலையில் தன்னை குழுவிற்கு நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனுபவமுள்ள நிபுணரான பொன்சேகா இங்கு இருக்க வேண்டும் என அங்கு கூடியிருந்த அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த பதவியை விட்டு விலக வேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் கேட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதற்கு பதிலளித்த ரவூப் ஹக்கீம், இந்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இருந்தமையால் அவரது தலைமையின் கீழ் செயற்பட முடியாத காரணத்தினால் பொன்சேகா பதவி விலகுவதாக பொன்சேகா தன்னிடம் அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தன்னை இந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்தார். ஆனால் அது குறித்து நாடாளுமன்றக் குழு இறுதி முடிவு எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.