ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் கூட்டாக செயற்படுத்தப்படவிருந்த கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடலை தொடங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
திட்டத்தை மீள ஆரம்பிக்கும் தீர்மானம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் ஜப்பானுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர், சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் முயற்சியில், இந்த திட்டத்தை மீள ஆரம்பிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
சமீப காலங்களில், நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவிகளை வழங்கும் முன்னணி நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது.
எனினும், சில திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகளை நிறுத்தியதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, இலங்கை – ஜப்பான் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள இந்த சரிவை சரி செய்யும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பானுக்கான விஜயம் அமைந்திருந்தது.
அமைச்சரவையின் அனுமதியை பெற்ற ஜனாதிபதி
டோக்கியோவுக்கு புறப்படுவதற்கு முன்னர், கொழும்பு கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை ஜனாதிபதி பெற்றுள்ளார் என அவர் தெரிவித்தார்.
மேலும், முதலீட்டுத் திட்டம் அல்லது வெளிநாட்டு உதவிக்காக இலங்கை வேறொரு நாட்டுடன் கைச்சாத்திடும் எந்தவொரு ஒப்பந்தமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அத்தோடு அத்தகைய ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவருவது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.