ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்கிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- உச்ச நீதிமன்றத்தில் உங்கள் அத்தை ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளி என்று தீர்ப்பளித்து இருக்கிறதே? இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- அவர் குற்றவாளி இல்லை. 2 நீதிபதிகள் தீர்ப்பு அளித்து இருக்கிறார்கள். மேல் முறையீடு இருக்கிறது. சீராய்வு மனு தாக்கல் செய்து, அவர் குற்றவாளி இல்லை என்று நிரூபிப்போம்.
கேள்வி:- சசிகலா சிறைக்கு போன பிறகு நீங்கள் இப்போது டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்- ஒரு போதும் இல்லை. அவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கட்சிக்கு பொதுச்செயலாளர் இருக்கும்போது, துணை பொதுச்செயலாளர் எதற்கு? ஓ.பன்னீர்செல்வம் 3 முறை முதல்-அமைச்சராக இருந்து இருக்கிறார். அவரே பொறுப்பு ஏற்கலாம். அவரே அ.தி.மு.க.வை வழிநடத்தலாம். எங்களுக்குள் இருப்பது குடும்ப சண்டை தான். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வுக்கு முக்கியமானவர்கள் தான். எல்லோரும் சேர்ந்து அ.தி.மு.க.வை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அ.தி.மு.க.வில் நான் அடிப்படை உறுப்பினர் இல்லை. என்னை பொறுத்தவரையில் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான். என்னை பொறுத்தவரையில் சின்ன அத்தைக்கு (சசிகலா) ஆதரவாக இருப்பேன். அவர் எனக்கு அம்மாவுக்கு மேலே.
கேள்வி:- அப்படியென்றால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உங்கள் ஆதரவு உண்டா?
பதில்:- நிச்சயமாக, அவர் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்ததாக நான் நினைக்கவில்லை. அவர் அ.தி.மு.க.வில் தான் இருப்பார். அ.தி.மு.க.வுக்கு பொது எதிரி தி.மு.க. தான் வேறு யாரும் இல்லை. அ.தி.மு.க. ஒற்றுமையாக இருக்க தான் தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்.
கேள்வி:- உங்கள் அத்தை சம்பாதித்த சொத்துகளில் நீங்கள் உரிமை கோருவீர்களா?
பதில்:- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் உள்ளது. நான் உரிமை கோரவில்லை. அதேநேரத்தில் ரூ.100 கோடி அபராதத்தை நான் கடன் வாங்கியாவது செலுத்துவேன்.
கேள்வி:- உங்கள் சகோதரி தீபா அரசியல் பயணத்தில் உங்கள் பங்கு என்னவாக இருக்கும்? அவருக்கு ஆதரவாக செயல்படுவீர்களா?
பதில்:- அரசியலில் ஈடுபடுவது அவரது விருப்பம். சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன். அ.தி.மு.க. எப்போதும் ஒன்று தான். அ.தி.மு.க.வை தீபாவோ?, ஓ.பன்னீர்செல்வமும் அசிங்கப்படுத்த மாட்டார்கள். மனசாட்சிபடி செயல்படுவார்கள். ஜெயலலிதாவின் குடும்பம் அரசியலுக்கு வந்தால் தான் அது குடும்ப அரசியல். இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லையே? நான் சின்ன அத்தை (சசிகலா) பக்கம் தான். அதேநேரத்தில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அவர் குடும்பத்தில் இருந்து வந்த தினகரனை ஏற்றுக்கொள்ள முடியாது.
கேள்வி:- தீபா ஆர்.கே.நகரில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
பதில்:- ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
கேள்வி:- தீபா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
பதில்:- அ.தி.மு.க.வில் எந்த அணியும் இல்லை. எல்லோரும் ஒன்றாக தான் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தான் தேர்தல் வர வேண்டும் என்று நினைக்கிறது. எதற்கு தேர்தல் வர வேண்டும்? ஒரு ஆட்சி நல்லது செய்யும் போது தேவையில்லாததை ஏன் பேச வேண்டும். எதுவும் செய்யவில்லை என்றால் சொல்லலாம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார். ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறார். அவர் வேறு எங்கும் செல்லவில்லையே? என்னை பொறுத்தவரையில் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை அவர் வரவேற்றது தான் அ.தி.மு.க.வினரை புண்படுத்தி விட்டது. தீபாவும், பன்னீர்செல்வமும், அ.தி.மு.க. வும் தனித்தனியாக நின்றால் என்னவாகும்? இழப்பு அ.தி. மு.க.வுக்கு தானே. இது தி.மு.க.வுக்கு தானே சாதகம்.
கேள்வி:- நாளை (இன்று) உங்கள் அத்தை ஜெயலலிதாவின் பிறந்தநாள். இந்த நாளில் இருந்து உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
பதில்:- எப்போதும் போல் தான். அ.தி.மு.க. உடையாமல் இருக்க வேண்டும். அது தான். அத்தையின் விருப்பமும் அது தான்.
கேள்வி:- உங்கள் அத்தை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது, மரணம் அடைந்தது குறித்து நீதி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீபாவாலும், ஓ.பன்னீர்செல்வத்தாலும் விடுக்கப்பட்டுள்ளது. அதே கோரிக்கையை நீங்களும் வலியுறுத்துவீர்களா?
பதில்:- அவர்கள் தாராளமாக செய்யட்டும். என்னுடைய அத்தை ஆஸ்பத்திரியில் இருந்தபோது அருகில் இருந்து பார்த்தவன் நான். நீதி விசாரணை வேண்டும் என்றால், நாங்களும் ரெடி தான். அங்கு உள்ள வீடியோவை ரிலீஸ் செய்தாலே போதும். இது போன்று அ.தி.மு.க.வில் யாரும் கேட்கவில்லை.
கேள்வி:- உங்கள் அத்தை உயில் எழுதியிருக்கிறாரா? போயஸ் தோட்டம் உள்பட உங்கள் பாட்டி, அத்தை சம்பாதித்த சொத்துகளுக்காக நீதிமன்றம் செல்வீர்களா?
பதில்:- அத்தையின் சொத்துக்காக நீதிமன்றம் செல்வேன்.
கேள்வி:- போயஸ் கார்டன் இல்லத்திற்கு சொந்தம் கோருவீர்களா?
பதில்:- போயஸ் கார்டன் இல்லம் மட்டுமல்ல, ஐதராபாத் திராட்சை தோட்டம், செய்யூர் நிலம் உள்பட 6 சொத்துகள் எனக்கும், தீபாவுக்கு மட்டும் தான் சொந்தம். இதில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.
கேள்வி:- உங்கள் சகோதரி தீபா நாளை (இன்று) புதிய பேரவையை தொடங்குவதாக அறிவித்து இருக்கிறார்? இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- தொடங்கட்டும். ஆனால் ஜெயலலிதாவின் ஓட்டுக்கு அவர் ஆசைப்படக்கூடாது.
கேள்வி:- அ.தி.மு.க.வின் ஓட்டுக்கு ஆசைப்படக்கூடாது என்று சொல்லுகிறீர்கள்?
பதில்:- கட்சி ஓட்டு இல்லை… ஜெயலலிதாவுக்கான ஓட்டு.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.