யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான, விமான சேவைகளை ஏழு நாட்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடமிருந்து கடன் வசதி
யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தற்பொழுது வாரமொன்றில் நான்கு நாட்கள் விமான சேவைகள் இடம்பெறுவதுடன் இதனை வாரத்துக்கு ஏழு நாட்களாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் யாழ்ப்பாண விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்த்திருப்பதாகவும், இதற்கான கடன்வசதி கிடைத்ததும் விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.