கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் துருக்கியின் ஸ்தான்புல் நகருக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் இலங்கைக்கான துருக்கிய தூதுவருக்கும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் நேற்று(31.05.2023) இடம்பெற்றுள்ளது.
புதிய விமான சேவை
இந்த புதிய சேவையானது ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளுக்கு நன்மை பயப்பது மட்டுமன்றி, இலங்கைக்கு வருகை தருவதற்கு அவர்களை ஊக்குவிக்கும்.
துருக்கியின் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வரும்போது அவர்கள் அதிகமாக பயண நேரத்தை செலவிட வேண்டியுள்ளது.
இதேவேளை அதிகளவான ஐரோப்பாவில் வாழ் இலங்கையர்கள் விடுமுறை மற்றும் உறவினர்களை பார்ப்பதற்கு ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு வருகை தருவார்கள்.
வழமையாக இவர்கள் கட்டார் மற்றும் டுபாய் ஊடாகவே பணயத்தினை மேற்கொள்வார்கள்.
காரணம் இன்றி நிறுத்தப்பட்ட விமான சேவை
இந்நிலையில் தற்போது கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் துருக்கியின் ஸ்தான்புல் இடையிலான விமான சேவை ஆரம்பிக்குமாக இருந்தால் நேர விரையம் குறைவதுடன் ஐரோப்பிய வாழ் இலங்கையர்களிற்கு இந்த பயண பாதை சிறந்ததாக அமையலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானிய நாடுகள் இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவையினை நடாத்தி காரணம் இன்றி திடீர் என நிறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.