தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதலளிக்க முடியாமல் நல்லாட்சி அரசாங்கம் திணறி நிற்கின்றது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆயுதம் ஏந்திய தமிழர் தரப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்து, இலங்கைத் தீவுக்கு உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்திருப்பதாக மகிந்த அரசும், சிங்கள மக்களும் பால்சோறு பரிமாறி மகிழ்ந்தார்கள்.
யுத்தத்தை வெற்றிகொண்ட இலங்கைப் படைகள் தமிழ் மக்களை அடிமைகளாகவும், தமிழர் பிரதேசத்தை அபகரிப்புப் பிரதேசமாகவும் வைத்துக் கொண்டிருப்பதையே தமது வெற்றிக்கான வெகுமதியாகக் கருதி நிலை கொண்டிருக்கின்றார்கள்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில், பாதுகாப்புக் காரணங்களைக் கூறி படையினரும், விடுதலைப் புலிகளும் சாதாரண மக்களின் வீடுகளையும், காணிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
யுத்தம் இல்லாத நிலையில் படையினர் தாம் பயன்படுத்திய இடங்களையும், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய இடங்களையும் உரியவர்களிடம் மீள ஒப்படைப்பதே நியாயமாக இருக்கும். ஆனால் இலங்கையில் படைகளின் மனோ நிலையும், தென் இலங்கை அரசாங்கத்தின் மனோ நிலையும் வேறுபட்டதாகவே இருக்கின்றது.
தாம் பாதுகாப்புக் காரணங்களுக்காக அபகரித்த பொது மக்களின் சொத்துக்களும், காணியும் தமக்கே உரித்தானவை என்பதோடு,விடுதலைப் புலிகள் பயன்படுத்திய அனைத்தும் தமக்கே உரித்தானவை என்றும் நினைத்துக் கொண்டு,தமிழர் நிலத்தில் பாத்தீனியச் செடியைப்போல் இலங்கைப் படைகள் நிலைகொண்டு இருக்கின்றார்கள்.
வடக்கு, கிழக்கில் படைமுகாம்கள் அமைந்திருப்பதைப் பார்த்தால்,அவை ஒவ்வொன்றும் பல ஏக்கர்கள் உள்ளடங்கிய பாரிய முகாம்களாகவே அமைந்துள்ளன. அந்த முகாம்களுக்கு அருகாமையில் பௌத்த விகாரைகளை அமைத்துக் கொண்டு அதைப் பராமறிப்பவர்களாகவும் படையினரே இருக்கின்றார்கள். அந்த விகாரைகளை அண்டிய பகுதிகளில் தற்பொது சிங்களக் குடும்பங்களும் குடியேறத் தொடங்கியிருக்கின்றனர்.
யுத்தத்தை வெற்றிகொண்ட மகிந்த ராஜபக்சவும், அவரது சகோதரர்களும், புதல்வர்களும் தமது ஆட்சியும், அதிகாரங்களும் நிலையானது என்றும் தமது வாழ் நாள் எல்லாம் அரசர்களைப்போல் வாழப்போவதாகவும் எண்ணியதால், அவர்கள் படையினருக்கு தேவையானது எல்லாவற்றையும் செய்துகொடுத்து யுத்தத்திற்குப் பின்னரும் நாட்டை ஒரு அதிகார இரும்புத் திரைக்குள் வைத்திருந்தே ஆட்சி செய்தார்கள்.
அதற்காக அவர்கள் செயற்படுத்திய திட்டங்களை பகிரங்கமாக ஆராய வேண்டும். அதில் விடுதலைப் புலிகள் சிலரை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பாமல் வேறு மறைவான இடத்தில் வைத்திருந்து, பின்னர் அவர்களை ஊருக்குள் அனுப்பி மீண்டும் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சிப்பதாக ஒரு திட்டத்தை பரப்புவதும், யாரேனும் அதை நம்பி ஆர்வம் காட்டினால் அவர்களையும் கொலை செய்வது என்ற திட்டம் தளத்திலும், புலத்திலும்; வாழம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மத்தியிலும் பரீட்சித்தப் பாரக்கப்பட்டதும்,புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை நாட்டிலிருந்தே அகற்றுவதற்கான திட்டமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு போகும் திட்டத்தை வகுத்ததும், அதற்கு தாமே துணையாக நின்று செயற்படுத்தியதும், அதிலும் முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்களை கடலிலேயே பல சந்தர்ப்பங்களில் கொலை செய்ததுமாக பல்வேறு குள்ளநரித் திட்டங்கள் இன்னும் இரகசியமாகவே இருக்கின்றன.
மொத்தத்தில் இலங்பை; படைகளாலும், மகிந்த ஆட்சியாலும் தீட்டப்பட்ட எல்லாத் திட்டங்களுமே முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை இல்லாதொழிப்பதும், தமிழ்மக்களை முடியுமானவரை நாட்டைவிட்டு ஓடச் செய்வதும்,கலாசார ரீதியாக அழிப்பதும்,செயற்கையாக இனப்பரம்பலை அழிப்பதுமாகவே இருந்திருக்கின்றது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்த்து தென் இலங்கை அரசியலில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதன் ஊடாக இத்தகை சதிகளை முறியடிக்க முடியும் என்று தமிழ்மக்கள் எதிர்பார்த்ததில் தவறு இல்லை. அந்த எதிர்பார்ப்பு வெற்றிகரமாக முடிந்தது. ஆனால் தென் இலங்கை அரசியல் தலைமையில் மாற்றம் வந்ததே தவிர ஆட்சி முறையிலும், அதன் எண்ணத்திலும் மாற்றம் ஏற்படவில்லை என்பதில் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
காணிகளை மீள உரியவர்களிடம் ஒப்படைக்கப் போவதில்லை என்பதையும், படையினர் தம் வசப்படுத்திய அனைத்தும் படையினருக்கே சொந்தம் என்றும் வெளிப்படையாக உணர்த்துகின்றவராக மகிந்த ராஜபக்ச இருந்தார். அதேவேளை தன்னை நியாயவாதிகயாகக் காட்டிக்கொள்வதற்கும்,சர்வதேசத்தின் அழுத்தத்திற்கும், படையினர் வசமிருந்த பல்லாயிரம் ஏக்கர் காணிகளை மீள உரியவர்களிடம் ஒப்படைத்தும் இருந்தார். அதாவது மகிந்த ராஜபக்ச ஒரு உத்தரவை வழங்கினால் அதைப் படையினர் செயற்படுத்துகின்றவர்களாகவும் இருந்தார்கள்.
தற்போதைய நல்லாட்சியில் படையினர் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஜனாதிபதியின் உத்தரவுகளை மதித்து நடப்பதில்லை. ஜனாதிபதியின் காணி விடுவிப்புத் தொடர்பான அறிவிப்புக்கள் அரசியல் பேச்சாகவே இருந்துவிடுகின்றன. இதே நிலைதான் தற்போது முல்லைத்தீவில் கேப்பாபுலவு மக்களின் விடயத்திலும் ஏற்பட்டுள்ளது.
மக்களின் நிலத்தில் நிலை கொண்டிருக்கும் விமானப்படையினர் அந்த நிலத்தை மீள உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தமக்கு பொறுத்தமான இடத்துக்கு போவதற்கு விருப்பமற்று அடம்பிடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் முகாமுக்கு முன்பாக கேப்பாபுலவு மக்கள் தமது வாழ்விடத்தை மீண்டும் ஒப்படைக்கும்வரை போராட்டத்தை கைவிடப்பொவதில்லை என்று கடந்த 22 நாட்களாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
பகலில் கடுமையான வெயில், இரவில் அசாதாரணமான பனி இவற்றுக்கு முகம் கொடுத்தபடி பெண்கள் வயோதிபர், குழந்தைகள் என்று குடும்பம் குடும்பமாக வீதியில் நின்று அந்த மக்கள் நியாயம் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.இந்த விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் பாரா முகமாகவே இருந்துவருகின்றது.
உண்மையில் நல்லாட்சி அரசாங்கம் அந்த மக்களின் கோரிக்கைகக்கு நியாயத்தை வழங்கவேண்டும்.விமானப்படையினரை பொருத்தமான வேறு இடத்திற்கு மாற்றவேண்டும். யுத்தம் நடத்திய அரசுகளின் மனோ நிலையில் நல்லாட்சி அரசாங்கமும் இருக்க முடியாது. கேப்பாபுலவு மக்கள் அத்துமீறலுக்கான அனுமதியையோ,புதிய காணிகளை தமக்கு பகிர்ந்தளிக்குமாரோ கேட்டு போராடவில்லை.
அந்த மக்களின் போராட்டத்திற்கு சிலபொது அமைப்பக்களும், மாணவர்களும் சில சிங்கள மக்களும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்ற நிலையில், நல்லாட்சி அரசு அமைவதற்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் பகிஸ்கரிப்புச் செய்து கேப்பாபுலவு மக்களுக்கு நியாயத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கேட்குமாக இருந்தால், அரசாங்கம் நிச்சயமாக தமக்கு நியாயம் வழங்கும் என்று அந்த மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
துரதிஷ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவ்வாறு இதுவரை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக தனித்தனி நபர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மக்களின் போராட்ட கொட்டகைக்குள் புகுந்து சில நிமிடங்கள் அமர்ந்து தமது ஆதரவை வெளிப்படுத்தவதுடன், அங்கு நின்று கொண்டு அரசாங்கத்தை விமர்சித்துவிட்டும் செல்வதையே காணக்கூடியதாக இருப்பது கேப்பாபுலவு மக்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேப்பாபுலவு மக்களின் நியாயத்துக்காக அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால், அந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வீதியில் 22 நாட்களாக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
வடக்கு மாகாணசபையும் இவ்விடயத்தில் அரசுக்குஅழுத்தத்தைக் கொடுத்திருக்கலாம். நல்லாட்சியில் மக்கள் போராடுவதற்கு உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது என்று ஆட்சியாளர்கள் பூரிப்படைந்து தம்மை ஜனநாயகவாதிகளாகக் காட்டிக் கொள்கின்றார்களே தவிர, போராடுகின்ற மக்களுக்கு நியாயத்தையோ, தீர்வையோ வழங்கத் திறாணியற்றவர்களாகவே நல்லாட்சியாளர்கள் இருக்கின்றார்கள்.