வழமையாக அதிகநேர தூக்கம் தேவைப்படாமல் இரவு நேரங்களில் ஒன்பது மணித்தியாலயத்திற்கு அதிகமாக தூங்குபவர்கள் டிமென்டியா எனும் மனநோயால் பாதிக்கப்படும் அபாயத்தை பெறுவதோடு, அல்சைமர்ஸ் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புறும் நோயின் தாக்கத்தின் ஆரம்ப அறிகுறிகளை வெளிப்படுத்தலாம் என புதிய ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நோய் ஆய்வானது சராசரியாக அறுபது வயதுடைய சுமார் 2500 பேரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்பது மணித்தியாலயத்திற்கு அதிகமாக, தொடர்ச்சியாக தூங்கியவர்களுக்கு அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருமடங்கு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளதாக அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் தொடர்ச்சியாக எத்தனை மணித்தியாலங்கள் தூங்குகிறார்கள்? என்ற கேள்வியானது டிமென்டியா எனப்படும் மனநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளவர்களை இனங்காணுவதற்கு ஏற்புடையதாக இருக்குமென, அமெரிக்காவில் உள்ள போஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.