மாலபே தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று (வியாழக்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும், மக்களை தெளிவுபடுத்தும் கூட்டமொன்றும் நடத்தப்பட்டுள்ளது.
ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு எதிரில் பொதுக் கூட்டமொன்றையும் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, மாலபே சைட்டம் கல்லூரிக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
இதன்போது, மாலபே தனியர் மருத்துவக் கல்லூரியை இழுத்து மூடுவதன் மூலமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
மக்கள் விடுதலை முன்னணியினரின் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பில் போக்குரவத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், பொதுமக்கள் பிரயாணிகள் என பலரும் அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பிரசார செயலாளர் ரில்வின் சில்வா, உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.