டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று வேடமணிந்து வந்த மூன்று பேர் கெஸ்பேவ, படுவந்தர பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வந்து 73 வயதுடைய வயோதிப பெண்ணின் கை கால்களை கட்டிவிட்டு தங்கத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கெஸ்பேவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வந்த கொள்ளையர்கள் 13 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்க மோதிரங்கள், தங்க நெக்லஸ்கள், தங்க வளையல்கள் மற்றும் கைத்தொலைபேசியை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
முன்னதாக இரண்டு வீடுகளில் சோதனை
கைகளில் கோப்பு அட்டைகள் மற்றும் ஆவணங்களுடன் வந்த நல்ல உடை அணிந்த கொள்ளையர்கள் மூவரும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டின் முன்பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் டெங்கு புழுக்கள் இருப்பதை சோதனையிட்டதன் பின்னர் இந்த வீட்டிற்கு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணை
இரண்டு வீடுகளிலும் இரண்டு மூன்று பேர் இருந்ததை அவதானித்த கொள்ளையர்கள் இந்த வீட்டிற்கு வந்து வயோதிப பெண்ணிடம் ஒரு குவளை தண்ணீர் கேட்டதாகவும், அதனை கொடுப்பதற்காக சமையல் அறைக்குள் நுழைந்த போது அவரின் பின்னால் சென்று அவரது கை, கால்களைக் கட்டிவைத்து, பின்னர், அவர் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த தங்க நகைகள், கைத்தொலைபேசியை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.