நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தமிழ்திரை உலகில் இவர் விட்டுச் சென்றிருக்கும் வெற்றிடத்தை எந்தக் காலத்திலும் யாராலும் நிரப்பமுடியாது. அந்த அளவுக்கு நடிப்புலகில் நவரசங்களையும் கொட்டியவர் அவர். திரை உலகில் 1952-ம் ஆண்டு கால் பதித்த சிவாஜி கணேசன் ஏற்காத வேடங்களே இல்லை. ஜூலை 21, 2001-ம் ஆண்டு மறைந்த அவர் 288 படங்களில் நடித்துள்ளார்.
அவரது நினைவை போற்றும் வகையில் மெரினா கடற்கரையில் கம்பீரமான சிவாஜி சிலை நிறுவப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் சிவாஜிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இதன் பின்னர் மெரினா கடற்கரையில் சிவாஜி சிலை தனி அடையாளமாகவே மாறிப்போனது.
இந்த நிலையில் அடையாறில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில், 28 ஆயிரத்து 300 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான முறையில் மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கி வேகமாக நடந்து வருகிறது.
சிவாஜி கணேசனின் நினைவை போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில் அவருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து மணி மண்டபத்துக்காக 3 விதமான வரை படங்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றை ஜெயலலிதாவும், சிவாஜி கணேசன் குடும்பத்தினரும் தேர்வு செய்தனர்.
இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி மணி மண்டபம் கட்டும் பணி தொடங்கியது.
இதன் பின்னர் கடந்த 3 மாதங்களாக மணிமண்டபம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மணிமண்டபத்தில் பிரதான பெரிய கலசம் உள்ளிட்ட 4 கலசங்களும், 4 நுழைவு வாயில்களும் அமைக்கப்பட உள்ளன.
மணிமண்டபத்தின் உட்புறச் சுவர்களில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட உள்ளன. வெளிப்புறத்தில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட உள்ளன.
மணிமண்டபத்தின் மேற்கூறை பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மணிமண்டபத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணியும் நடந்து வருகிறது. கழிவறை வசதியும் செய்யப்படுகிறது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்படும் இப்பணிகள் அனைத்தும் முடிவடைய இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிமண்டப கட்டுமான பணி முடிந்ததும் மே மாத இறுதியிலோ அல்லது ஜூன் மாத தொடக்கத்திலோ மணிமண்டபம் திறக்கப்படும் என்று தெரிகிறது.
அப்போது மெரினாவில் உள்ள சிவாஜி சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. இந்த மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் அறிய புகைப்படங்கள் மற்றும் அவரை பற்றிய தகவல்களும் இடம்பெற உள்ளது.