ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது அண்ணன் மகள் ஜெ.தீபாவை அரசியலுக்கு வரும்படி அ.தி.மு.க. தொண்டர்கள் வற்புறுத்தி வந்தனர்.
தினமும் நூற்றுக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் தியாகராயநகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபா வீட்டுக்கு சென்று ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிந்த தீபா, ஜெயலலிதா பிறந்த நாளான இன்று (24-ந்தேதி) முக்கிய முடிவை வெளியிடுவேன் என்று அறிவித்தார். இதையொட்டி இன்று காலை முதலே தீபா வீடு முன்பு ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் வந்து குவிந்தனர்.
வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் சர்வ மத பிரார்த்தனை மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.
தீபா, தனது வீட்டின் ஒரு பகுதியை கட்சி அலுவலகமாக மாற்றியுள்ளார். இந்த புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை 6 மணிக்கு நடந்தது.
வைதீக முறைப்படி புரோகிதர்கள் யாகம் வளர்த்து பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் செய்தனர். இதைத் தொடர்ந்து புதிய கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி தீபா திறந்து வைத்தார். பிறகு அலுவலகத்துக்குள் அவர் சென்று குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
இதில் கோவை முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன், விழுப்புரம் சீனிவாசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதன் பிறகு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு தீபா சென்றார். அங்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பிறகு மதுரவாயலில் உள்ள குழந்தைகள் காப்பகம் சென்றார். அங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கினார்.
மதியம் 12 மணிக்கு, தனது வீடு முன்பு அன்னதானத்தைத் தொடங்கிவைக்கிறார். இன்று மாலை 5 மணிக்கு ‘‘ஜெ.தீபா பேரவை’’ என்ற அமைப்பை அதிகாரப்பூர்வமாக முறைப்படி அறிவிக்கிறார்.
இந்த புதிய அமைப்பின் மாநில நிர்வாகிகள் பட்டியலையும் அப்போது தீபா வெளியிட உள்ளார்.
பேரவையின் புதிய கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைக்க உள்ளார். இந்த கொடி அ.தி.மு.க.வின் கருப்பு, சிவப்பு, வெள்ளை வண்ணத்தில் நடுவில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும்.
ஜெ.தீபா பேரவை தொடங்குவதை முன்னிட்டு சென்னை தவிர வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் வந்திருந்தனர்.