மாத்தளை, கலேவெல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிறந்து 5 நாட்களே ஆன சிசுவை தனது உற்ற தோழியை ஏமாற்றி ஒப்படைத்துவிட்டு தாய் தப்பி சென்றுள்ளார்.
அவசர பயணம் செல்லவுள்ளதாகவும், குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும் குறித்த பெண் தனது நண்பியிடம் கூறிவிட்டு சென்றுளள்ளார்.
கைக்குழந்தையுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்
அவ்வாறு கூறி சென்ற தனது தோழி மாலை வரை திரும்பி வரவில்லை என்பதனால் கைக்குழந்தையுடன் 23 வயதுடைய யுவதி ஒருவர் கலேவெல பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அந்த பெண் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்துள்ளதாகவும், கடந்த 4ஆம் திகதி அப்பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகவும் கைக்குழந்தையுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்த யுவதி கூறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனது உற்ற தோழியை ஏமாற்றி குழந்தையை அவரிடம் ஒப்படைத்து விட்டு ஓடிய பெண் வெலிமடை, மொரகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதானவர் என தெரியவந்துள்ளது.
சிசு வைத்தியசாலையில் அனுமதி
இந்த நிலையில் 5 நாட்களே ஆன சிசு தம்புள்ளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
கைக்குழந்தையுடன் பொலிஸாரிடம் வந்த 23 வயதுடைய யுவதி கலேவெல பிரதேசத்தில் வசிப்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சூழலில் சந்தேகத்திற்குரிய பெண்ணை கைது செய்ய கலேவெல பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.