புத்தளம் நெடும்குளம் பகுதியில் பல இடங்களில் அதிகளவான காகங்கள் உயிரிழந்து விழுந்து கிடப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
நெடும்குளம் பகுதியில் பல இடங்களில் கிட்டத்தட்ட 100 காகங்கள் இறந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இப்படி உயிரிழந்து கிடக்கும் காகங்களுக்கு அருகில் உள்ள வானில் காக கூட்டங்களுக்காக பறந்து செல்வதையும் காண முடிந்துள்ளது. எனினும், காகங்கள் இறந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இடத்தில் காகங்களின் உடல்கள் காணப்படுவதாகவும், இது போன்று காகங்கள் இறந்து கிடப்பதை தாங்கள் இதற்கு முன் பார்த்ததில்லை எனவும், இதனை பார்க்க அதிர்ச்சியாக உள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த காகங்கள் பறக்கும் போது ஒரே நேரத்தில் தரையில் விழுந்ததை தான் பார்த்ததாகவும், அப்படி விழுந்த காகங்கள் சில நிமிடங்களில் இறந்துவிட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலத்தில் விழுந்த காகங்களுக்கு தண்ணீர் கொடுக்க முயன்றதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் புத்தளம் கால்நடை வைத்திய அதிகாரிக்கு மக்கள் அறிவித்ததையடுத்து, தற்போது கால்நடைப் புலனாய்வுப் பிரிவினரால் உயிரிழந்த காகங்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்படுகின்றது.