உக்ரைன் – ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் நீர்மின் நிலைய அணை அழிப்பின் மூலம் ரஷ்யா மீண்டும் தனது கோர முகத்தை உலக நாடுகளுக்கு காட்டியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ககோவ்கா அணை உடைப்பு உக்ரைனின் கார்சன் மாகாணத்தில் ககோவ்கா அணையில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால் டினிப்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், ஆபத்தான பகுதியிலிருந்து சுமார் 16 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அணையை சேதப்படுத்தியதாக ரஷ்யாவும் உக்ரைனும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் ரஷ்யாவை கண்டித்து பதிவிட்டு வருகின்றார்.
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில் ரஷ்யாவை கடுமையாக சாடியுள்ளதுடன், சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
ரஷ்யா விடுத்துள்ள அச்சுறுத்தல்
ரஷ்ய பயங்கரவாதிகள் மீண்டும் வாழும் அனைவருக்கும் தாங்கள் அச்சுறுத்தல் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். அது தான் வேண்டுமென்றே நிகழ்ந்த உக்ரைனில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றின் அழிவு எனவும் தனது கண்டன பதிவில் தெரிவித்துள்ளார்.
இலட்சக்கணக்கான மக்கள் குடிநீரின்றி தவித்து வரும் நிலையில், ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில், ஆக்கிரமிப்பாளர்கள் மக்களுக்கு உதவ முயற்சிக்கவில்லை’ எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ரஷ்யா அப்பாவி மக்களின் நிலத்தை கைப்பற்றிக்கொண்டு அந்த மக்களை கொடுமைப்படுத்தும் விதம் ஐரோப்பாவிற்கும், உலகிற்கும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.