ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கை குறித்து ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசக் நாடியா பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
வடமாகாண மக்கள் குறித்தும், இலங்கைத் தமிழ் எமக்கள் தொடர்பாகவும், தொட்டத்தொழிலாளர்கள் குறித்தும் பல குறிப்புகள் அடங்கிய அறிக்கையை ஐ.நாவில் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் தரப்பட்டுள்ளன.
அதில் 1990 ஆம் ஆண்டு புலிகளினால் வெளியேற்றப்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். இதற்காக அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தேவையான நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுக்க வேண்டும்.
இந்த விடயத்தில் ஐ.நா.வின் இடம்பெயர் மக்கள் தொடர்பான பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஆனால் புதிய சட்டமானது அனைத்துலக தரத்திற்கு அமைய வேண்டும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமைகள் உடனடியாக மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
அநீதிகளினால் சிறுபான்மை பெண்களும் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அரசாங்கம் ஆராய வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் உடனடியாக வாழ்வாதார உதவிகளை செய்ய வேண்டும்.
பெண்களின் குரல்கள் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் செவிமடுக்கப்பட வேண்டும்.
மலையக தமிழ் மக்களுக்காக விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் அடுத்த ஐந்து வருடத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற விடயங்கள் உட்பட மேலும் பல கருத்துக்கள் அடங்கியதாக அந்த அறிக்கை காணப்படுகின்றது.
மேலும், சிறுபான்மையினர் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசக் நாடியா கடந்த ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் ஒன்றை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.