தென்னிந்தியாவின் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சென்னைக்கு செல்லவேண்டும் வண்டி வருமா என என்னத்தை கண்ணையா என்பவரிடம் கேட்பார். அவரும் வண்டி வரும் ஆனா வராது என பதிலளிப்பார். இந்த நகைச்சுவை இன்று வரை பிரபலமாக உள்ளது.இந்த நகைச்சுவை எமது தமிழ் மக்களுக்கும் சாலப்பொருந்தும்.
முப்பது வருட இரத்தம் சிந்திய ஆயுதப்போராட்டம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவிற்கு வந்த நிலையில் இன்று வரை புரையோடிப்போயுள்ள தமிழருக்கான இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
மைத்திரி -ரணில் தலைமையிலான நல்லாட்சிக்கு
கடந்த மைத்திரி -ரணில் தலைமையிலான நல்லாட்சிக்கு ஐந்து வருடமாக முண்டு கொடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு. அந்த காலகட்டத்தில் தமிழ் மக்களை சிங்களத் தலைமைகள் தான் ஏமாற்றும் காலம் போய் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் ஏமாற்றினார்.
அதாவது பொங்கலுக்கு தீர்வு,தீபாவளிக்கு தீர்வு என வானவேடிக்கையை கொளுத்திப் போட்டார். இறுதியில் நல்லாட்சி தனது காலத்தை செவ்வனே நிறைவு செய்து அடுத்த தேர்தலை எதிர்கொண்டது நாடு. ஆனால் வெறுங்கையுடன் நின்றனர் தமிழ் மக்கள்.
அடுத்த தலைவராக கோட்டாபய
அடுத்த தலைவராக கோட்டாபய வந்தார்.இவர் ஜே.ஆரின் பாணியில் போர் என்றால் போர் என்ற சாரப்பட தனது ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல வெறுத்துப்போன சிங்கள மக்கள் பொங்கியெழுந்து அவரை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றினர். அப்போதும் தமிழ் மக்கள் வெறும் கையுடன் தான் நின்றார்கள்.
தற்போது அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் வென்றவர் போல அதிபர் ஆகினார் ரணில். அவரும் சிறிலங்காவின் சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்றார்.சுதந்திர தினமும் முடிந்து அடுத்த வருட சுதந்திர தினமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது அதிபர் தேர்தலை நடத்தி அடுத்தமுறை மீண்டும் அந்த ஆட்சிக்கதிரையில் அமரும் முனைப்பில் நிற்கிறார் ரணில். இப்போதும் தமிழ் மக்கள் வெறும் கையுடன் தான் நிற்கிறார்கள்.
காலாதிகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றி பிழைப்பதுதான் சிங்கள ஆட்சியாளர்களின் நரித்தந்திர மூளை.இதனை தம்மை சட்டமேதைகளாக காட்டிக்கொண்டு அரசியலில் ஈடுபடும் தமிழ் தலைவர்கள் விளங்கி கொள்ளாததுதான் பெரும் கவலை.
ரணிலின் ஆட்சியில் தமிழர் பகுதியில் நில அபகரிப்புகள்
என்றுமில்லாதவாறு தற்போதுதான் ரணிலின் ஆட்சியில் தமிழர் பகுதியில் நில அபகரிப்புகள் மிகவும் வேகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தமிழர் தாயகம் என்பதே இருக்கக்கூடாது என்பதை அவர் மிகவும் கச்சிதமாக செயற்படுத்தி வருகின்றார்.
இது தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்கு போட்டும் என்ன பயன்? இதற்கு சிறந்த உதாரணம் குருந்தூர் மலை விவகாரம்.நீதிமன்ற தடையையும் மீறி அங்கு வேகமாக கட்டி எழுப்பப்படுகிறது விகாரை.
எனவே தமிழருக்கான தீர்வு விடயத்தில் வாயால் அறிக்கைகளை விடுவதை விடுத்து உருப்படியான செயலில் களமிறங்குமா தமிழ் தலைமைகள்? நாடாளுமன்றில் ஆவேசமாக பேசுவது மட்டும் தமிழருக்கான தீர்வை கொண்டு வராது என்பது சாதாரண சாமானியனுக்கு விளங்கும் நிலையில் படித்த சட்ட மேதைகளுக்கு விளங்காதது ஏன் என்று புரியவில்லை.
இதைத்தான் அறப்படிச்ச பல்லி கூழ் பானைக்குள் விழுவது என்பதோ?