பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பு காரணமாக கட்சிக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமையன்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக்குழுவை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை தொடர்பு கொண்டு திட்டமிட்ட சந்திப்பு குறித்து அவருக்குத் தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் கூட்டத்திற்கு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்க முடியுமே தவிர, கட்சியின் சம்மதத்தைப் பெறாமல் ஏனைய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் சிரேஷ்டர்களை அவர் அழைக்க முடியாது என்று நாமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார்.
கட்சியின் தலைமை அதிருப்தி
ஜனாதிபதி, அவர்களிடம் பேச விரும்பினால் பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைவர்களுக்கு முதலில் தெரிவிக்க வேண்டும் என்றும் நாமல், குறித்த அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி, பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜனாதிபதியின் விருப்பத்தை அவருக்கு கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் சில அமைச்சர்கள், தற்போது ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ள நிலையில், அவர்கள் பல்வேறு கலந்துரையாடல்களுக்காக, கட்சியின் உறுப்பினர்களை அழைப்பது, கட்சியின் தலைமைக்கு அதிருப்தியை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.